Thursday 15 March 2012

கடவுள் நம்பிக்கை

அன்று எப்படியாவது ‘எது கடவுள்’ என்ற கட்டுரையை எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்தோடும், கையில் ஒரு குவளை காபியோடும் தன் அறைக்குள் நுழைந்தான் சத்குரு.

தனது டைரியை எடுத்து வேக வேகமாக எழுத ஆரம்பித்தான். தன் தெரு முனையில் உள்ள கோவிலில் இருக்கும் பிள்ளையார் தான் கடவுள் என்று எழுத ஆரம்பித்தான். ஆனால் அந்த கோவில் தன் ஊரில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்பதால் அவனால் பிள்ளையார் தான் கடவுள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.

பிறகு உலகில் பலருக்கும் பரிட்சயமான இயேசு கிறிஸ்து தான் கடவுள் என்று எழுத ஆரம்பித்தான். பின்னர் கிறிஸ்துவர்கள் மட்டுமே அவரை கடவுளாக பின்பற்றுகிறார்கள் என்பதால் கிறிஸ்துவையும் கடவுளாக ஏற்க மறுத்தது அவன் மனம்.

இப்படியே சிவன், விஷ்ணு, அல்லா, புத்தர் என்று யாரையும் அவனால் கடவுளாக ஏற்று கொள்ள முடியவில்லை. டைரியின் பக்கங்கள் தான் வீணானது. அவனால் ஒரு வரி கூட எழுத முடியவில்லை.

அப்போது அன்பே கடவுள் என்று எங்கோ படித்த எண்ணம் அவன் மனதில் தோன்றியது. கமலஹாசன் பாணியில் அன்பே சிவம் என்று எழுத ஆரம்பித்தான். திடீரென்று அன்பு என்பது ஒரு உணர்வு தான், அதை எப்படி கடவுளாக நம்புவது என்ற எண்ணமும் அவனுக்கு தோன்றியது.

அப்படியே அறிவு, முயற்சி, உழைப்பு, இயற்கை என்று மனம் எங்கெங்கோ ஓட மூளை அனைத்தையும் நிராகரித்து கொண்டே இருந்தது. இறுதியில் கடவுளே இல்லை என்று எழுத ஆரம்பித்தான். கடவுள் இன்றி கருமூலம் எங்கே என்ற கேள்வி மனதில் தோன்ற, கடவுள் இல்லை என்பதையும் அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை அவனால்.

தான் கொண்டு வந்த காபி அருந்தாமல் ஆறிவிட்டது என்பதால், அந்த குவளையை கையில் எடுத்து கொண்டு தன்னால் இந்த கட்டுரையை எழுத முடியாது என்ற எண்ணத்தோடு அறையில் இருந்து வெளியேறினான் சத்குரு, நம்பிக்கை இல்லாதவனாய்.

No comments:

Post a Comment