Wednesday 22 August 2012

வாழ்க்கை


எப்பொழுதும் போல் ஆசிரமம் மிக அமைதியாகவே இருந்தது. குரு தன் சீடர்களுக்கு உபதேசங்களை வழங்கி கொண்டிருந்தார். அப்போது ஆசிரம வாயிலில் ஒரு தங்க பல்லக்கு வந்து இறங்கியது. பல்லக்கில் இருந்து தர்கூர் மாகாணத்தின் அரசன் போகாலன் வெளியே வந்து குருவிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டான்.

அவன் முகத்தில் தெரிந்த சிறு பதற்றத்தை கவனித்த குரு, அரசனை தனியே அழைத்து சென்று அவன் பதற்றத்திற்கான காரணத்தை வினவினார்.

“என் வாழ்வில் நிம்மதியே இல்லை. எந்த நேரமும் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இது ஏன்னு தெரிஞ்சுக்க தான் இங்கே வந்தேன் குருவே” என்று தன் சோகத்தினை குருவிடம் கூறினான் போகாலன்.

குரு போகாலனை அழைத்து கொண்டு ஆசிரமத்திற்கு வெளியே சென்றார். மிக நீண்ட நடை பயணத்திற்கு பின் சற்று தொலைவில் தெரியும் ஒரு மரத்தினை காட்டி அந்த மரத்தில் என்ன தெரிகிறது என்று போகாலனிடம் கேட்டார்.

அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த போகாலன் “ஒரு மரம் தெரியுது. அப்புறம் அதிலிருந்து நிறைய சருகுகள் பூமியில் விழுகிறது” என்றான். அப்போது அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவனை அழைத்த குரு, அவனிடம் மரத்தை காட்டி அதே கேள்வியை கேட்டார்.



அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த விவசாயி “மரத்தில் பூத்திருக்கும் பூக்கள் , கிளையில் அமர்ந்திருக்கும் வெண்ணிற புறாக்கள், மரத்தில் தொங்கும் கனிகள் தெரியுது” என்றான். இதைக் கேட்டவுடன் குரு அந்த விவசாயியை திருப்பி அனுப்பி விட்டு போகாலன் பக்கம் திரும்பினார்.

“இப்ப தெரியுதா உன் மன உளைச்சலுக்கு என்ன காரணம் என்று!!?? உனக்கு அந்த மரத்தில் இருந்து விழுந்த காய்ந்த சருகுகள் தான் தெரிந்தது. ஆனால் அந்த விவசாயிக்கு பூக்கள், பறவை, கனிகள் எல்லாம் தெரிந்தது. எல்லாமே நம்ம பார்வையிலே தான் இருக்கு.

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான ஒரு சிறிய இடைவெளி தான் வாழ்க்கை. அதை ரசித்து வாழ்வதும், வெறுத்து வீழ்வதும் நாம் பார்வையிலே தான் உள்ளது. வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சி தரும் தருணங்களை மட்டும் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். சோகங்களையும் துக்கங்களையும் எப்பவும் திரும்பி பார்த்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சருகாய் தான் போகும்.

குருவின் பேச்சை கேட்ட போகாலனின் மனதில் புது வெளிச்சம் பிறந்தது. குருவுக்கு நன்றிகளை கூறி விட்டு தன் அரண்மனைக்கு கிளம்பினான் புத்தம் புதிய வாழ்க்கையை வாழ.

பார்வை

நர்மதா வீட்டுக்கும் வாசலுக்கும் கலவரத்துடன் நடந்தபடி இருந்தாள். மிகவும் படபடப்புடன் காணப்பட்டாள். அவள் அம்மா எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவள் கேட்பதாய் இல்லை. தன் செல்ல மகள் சிவானி இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. பள்ளி முடிந்து ஒரு மணி நேரத்தை கடந்தும் அவளை காணாதது தான் நர்மதாவின் படபடப்புக்கு காரணம். பள்ளி சென்று பார்க்க போன நர்மதாவின் தந்தை பேத்தியை அழைத்துக் கொண்டு வீடு வந்தார். சிவானியை கண்டதும் அவளை அள்ளி அணைத்து கண்களில் முத்தமிட்டாள். 

“ஏன் தங்கம் இவ்வளோ லேட்? ஆட்டோ மாமா எங்கே? ஸ்கூல்’க்கு வரலையா?”

“வரலை மா. நான் எப்பவும் போல ஸ்கூல் கேட் கிட்டே நின்னிட்டுருந்தேன். ரொம்ப நேரம் ஆகவும் எனக்கு அழுகையா வந்துருச்சு. தாத்தாவை பாத்ததும் தான் எனக்கு பயம் போச்சு”. 

“நாளைக்கு வரட்டும். ஆட்டோ மாமாவை திட்டிடலாம். வேற ஆட்டோ மாத்திடலாமா தங்கம்?”

“சரி மா. தாத்தா நாம வாங்கிட்டு வந்த ஐஸ் எங்க?. எனக்கு கொடுங்க.”

ஐஸ் வாங்கி சாப்பிட ஆரம்பித்த சிவானி அனைத்தையும் மறந்து தொலைக்காட்சியில் மூழ்கினாள். நர்மதா தான் இன்னும் மனக் குழப்பத்துடன் இருந்தாள். அன்று இரவு அனைவரும் உறங்கிய பின்னும் நர்மதா மனம் பின்னோக்கி அசை போட ஆரம்பித்தது. 

நர்மதா துள்ளி விளையாடும் இளம் பெண். வாழ்க்கையில் எதற்கும் அஞ்சாமல் துணிவுடன் விளையாட்டு தனமாக சுற்றி திரிந்தவள். கல்லூரி படிப்பு முடிந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதற்கு ஏற்ற படி நல்ல வரன் ஒன்று அமைந்தது. 

நர்மதாவின் தாத்தா சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளில் ஒருவர். அதனாலோ என்னவோ மாப்பிள்ளை ரவிச்சந்திரன் ஒரு பட்டாளத்தான் என்றதும் நர்மதாவின் தந்தைக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒழுக்கத்திலும் ஊர் மெச்சும் படியே இருந்தான். விடுப்பு அதிகம் கிடைக்காததால் திருமணத்திற்கு இரு தினம் முன்னரே ஊர் திரும்பினான் ரவிச்சந்திரன். 

ஊர் கூடி வாழ்த்த ரவிச்சந்திரன் நர்மதா திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த நொடியில் இருந்து நர்மதாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் ரவிச்சந்திரன். நர்மதாவும் கணவன் மேல் உயிரையே வைத்திருந்தாள். 1 வாரம் கடந்தது. விருந்து கொண்டாட்டம் எல்லாம் முடிந்து அன்று தான் வீட்டில் நர்மதாவின் கையால் சமைத்து பரிமாறினாள். சாப்பிட்டு கொண்டிருந்த போதே அவசர அழைப்பு வந்தது.

அலை பேசியில் தொடர்பு கொண்டது அவனது சீனியர் ஆபிசர். பேசி முடித்ததும் அவன் முகம் எல்லாம் கவலையில் வாடியது.
“என்னங்க.. யார் பேசினா? என்ன சொன்னாங்க?”

“நாளைக்கே கிளம்பணுமாம். வேற எல்லைக்கு என்னை மாத்தறாங்கலாம்.”

“என்னங்க சொல்லுறீங்க.. நாளைக்கே வா!!! ஆனா ஒரு மாசம் லீவு போட்டுருக்கேனு சொன்னீங்க.”

“ஆமா. ஆனால் இப்போ அவசரமா வர சொல்றாங்க. நான் பேசி பாத்துட்டேன். அவங்க கேக்கலை. இப்போ போயிட்டு 2,3 மாதம் வேலை முடிந்ததும் மறுபடி லீவு போட்டுட்டு வரேன்.”

அரை குறை மனதுடன் சமாதானமானாள் நர்மதா. அடுத்த நாள் ரவிச்சந்திரன் எல்லை நோக்கி புறப்பட்டான். கண்களில் நீர் ததும்ப வழி அனுப்பினாள் நர்மதா. அங்கு சென்ற பின்னும் ரவிச்சந்திரனுக்கு நர்மதாவின் நினைவாகவே இருந்தது. எவ்வளவு முயன்றும் சிந்தனையை மாற்ற முடியவில்லை. புது இடம் என்பதால் சினேகிதர்களும் இல்லை. அடிக்கடி நர்மதாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொள்வான். 

அங்கு ரவிச்சந்திரனுக்கு இருந்த ஒரே ஆறுதல் அங்கு மெஸ்ஸில் பணி புரியும் வயதானவரின் பேத்தி சிவானி. 4 வயதே நிரம்பிய அவள் புத்தி கூர்மை மிக்கவள். மிக அழகானவள். பாசத்துடன் பேசுவாள். அவள் மழலை தமிழ் இவன் நெஞ்சை அள்ளும். இத்தனை நிறைகளை கொடுத்த ஆண்டவன் அவளுக்கும் பெரிய குறைகளை கொடுத்தான். பிறக்கும் போதே பார்வை இல்லாமல் பிறந்த அவள் ஒரு வயதில் தன் தாய், தந்தை இருவரையும் இழந்தவள். அவளுக்கென்று இருப்பது அவள் தாத்தா மட்டுமே. 



நாட்கள் நகர நகர ரவிச்சந்திரனுடன் அந்த குழந்தை ஒட்டிக் கொண்டது. சிவானிக்கு பார்வை கிடைத்தால் இன்னும் நலமாய் இருக்கும் என சில நேரம் எண்ணுவான். அவள் தாத்தாவிற்கு பிறகு யார் இவளை பாதுகாப்பார்கள்? இவளை தத்து எடுக்க வேண்டும் என கூட சில நேரம் எண்ணுவான். அடிக்கடி நர்மதாவிடம் சிவானியை பற்றி கூறியிருக்கிறான். அடுத்த முறை வரும் போது சிவானியை அழைத்து வரும்படி நர்மதா கூறியிருந்தாள். அவனும் அவளை அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருந்தான். 

எல்லையில் சண்டை வலுத்தது. அன்று நடந்த எல்லை சண்டையில் ரவிச்சந்திரன் குண்டு அடிபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருந்தான். தான் இறக்க போகும் தருவாயில் மருத்துவரிடம் தன் கண்களை குழந்தை சிவானிக்கு பொருத்தும்படியும் தன் மனைவிக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கூறி விட்டு மனம் முழுதும் நர்மதாவை பற்றிய சிந்தனைகளோடு இறந்தான். 

அவன் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்த அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். மாதம் கடந்தது. எதையோ சிந்தித்தவளாய் இருந்த நர்மதா திடீரென்று தன் தாய், தந்தையை அழைத்து சிவானியை பற்றி கூறி தத்து எடுக்க போவதாக கூறினாள். நர்மதாவின் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.

தன் மகளுக்கென்று இன்னொரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கும் எண்ணத்தில் இருந்த அவர்கள் எப்படி சம்மதிப்பார்கள்!! ஆனால் நர்மதாவோ ஒரே முடிவாக இருந்தாள். தன் வாழ்நாள் முழுவதும் தன் கணவனை நினைத்துக் கொண்டே அவன் கண்களை பார்த்துக் கொண்டே வாழ போவதாக கூறி சிவானியை அழைத்து வந்தாள்.

வருடங்கள் கடந்த பின்பும் அவனின் நினைவுகளும், பார்வைகளும் அவளை விட்டு நீங்கவில்லை. தன் இறந்த கால நினைவலைகளோடு அப்படியே உறங்கி போனாள் நர்மதா.....