Friday 15 June 2012

பொன் மலர்


தமிழ் தோட்டம் மாதாந்திர பதிவு போட்டிகளில் இரண்டாம் பரிசு பெற்ற கதை.



பொன் மலர்

பதிமூன்றாம் நூற்றாண்டு, தர்கூர் மாகாணத்தை போகாலன் என்ற அரசன் ஆட்சி செய்தான். அப்போது அவன் மாகாணத்திற்கு சொந்தமான கோமாதா ஒன்று ஒரே நேரத்தில் பத்து கன்றுகளை ஈன்றிருந்தது. இந்த செய்தி உலகம் முழுவதும் பரவ பாரசீகத்தின் அரசரும் இந்த செய்தியை அறிந்து வியப்படைந்தார்.

தன் சிப்பாய் ஒருவனை அழைத்து இந்த அதிசய நிகழ்வை பாராட்டி தர்கூரின் அரசருக்கு பனிரெண்டு பொன் மலர்களை பரிசாக கொடுத்து வரும்படி கூறினார். தன் அரசரின் கட்டளைப்படி பாரசீக சிப்பாய் தர்கூர் மாகாணத்தை அடைந்தான். அரசவைக்கு சென்று மன்னரின் கட்டளைப்படி போகாலனுக்கு அந்த பரிசை கொடுத்தான்.

போகாலன் அந்த பொன் மலர்களை பார்த்து மிகவும் ஆச்சர்யமும், மகிழ்வும் அடைந்தான். பாரசீக மன்னருக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டான்.

இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்கு சொல்ல வேண்டும். முட்டாள்களின் முட்டாள் என்ற ஒரு போட்டி வைத்தால் அதில் போகாலன் தான் வெற்றி பெறுவான். அந்தளவு ஒரு மிக பெரிய முட்டாள். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி பிறப்பதற்கு முன் இந்த உலகிற்கு இம்சை அரசனாக விளங்கியவன் போகாலன் தான் என்றால் அது மிகையல்ல.

பொன் மலரை பார்த்த நாள் முதல் தலை கால் புரியாமல் யோசித்து கொண்டிருந்தான் போகாலன். எப்படியாவது அந்த பொன் மலர் வளரும் செடியை தன் நாட்டிலும் பயிரிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

தன் மந்திரி ஆயுர்வேதனை அழைத்து இந்த பொன் மலர் செடி அல்லது அதன் விதை பற்றிய விவரங்களை அறிந்து வரும்படி கூறினான். ஆயுர்வேதன் தன் மன்னனிடம் “அப்படியெல்லாம் ஒரு செடி இல்லவே இல்லை, பொன்மலர் என்பது செயற்கையானதே” என்று கூறினான். இதை கேட்ட போகாலன் மிக கோபமடைந்தான். “நான் கண்ணால் பார்த்ததையே பொய் என்கிறாயா? இன்னும் 10 நாட்களுக்குள் பொன் மலர் பற்றிய செய்தியை கொண்டு வரவில்லை என்றால் உன் தலை துண்டிக்கப்படும்” என்று கட்டளையிட்டான்.

ஆயுர்வேதனுக்கு இந்த முட்டாள் மன்னனை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பத்து நாட்களும் அரசவைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினான். பத்தாவது நாள் காலை எதையோ யோசித்தவனாய் பனை சுவடியை எடுத்து எதையோ எழுத ஆரம்பித்தான். பின் அந்த பனை சுவடியை எடுத்துக் கொண்டு அரசவைக்கு புறப்பட்டான்.

போகலனிடம் சென்று தான் பொன் மலரை பற்றி சித்தர் ஒருவர் எழுதிய குறிப்பை எடுத்து வந்துள்ளதாக கூறினான். இதைக் கேட்ட போகாலன் மகிழ்ச்சியடைந்தான். அந்த குறிப்பை வாங்கி படித்த போகாலன் அதிர்ச்சி அடைந்தான். மூன்று தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே பொன் மலர் பூக்கும் என்று அந்த குறிப்பில் எழுதி இருந்தது.

தலை தப்பித்ததால் சந்தோசத்துடன் வீட்டிற்கு கிளம்பினான் ஆயுர்வேதன். பல நாட்கள் அந்த பனை சுவடியை திருப்பி திருப்பி பார்த்து கொண்டிருந்தான் போகாலன். தான் சாகும் தருவாயில், அந்த சுவடியுடன் இன்னொரு சுவடியையும் வைத்து அரசவை பொக்கிஷங்களுடன் வைக்கும்படி கூறினான். அந்த இன்னொரு சுவடியில் “என் பரம்பரையில் வரும் அரசர்கள் எப்படியாவது அந்த பொன் மலர் செடியினை நம் தர்கூர் மாகாணத்தில் பயிரிட்டு வளர வைக்க வேண்டும். இது தான் இந்த போகாலனின் இறுதி ஆசை” என்று எழுதி வைத்திருந்தான்.


பொன் மலருக்கான தேடல் தொடரும், இல்லை இல்லை போகாலனின் இம்சை தொடரும்.