Wednesday 30 May 2012

ஆட்டோக்காரன்




இரவு நேரம் என்பதால் சாலை சற்று நெரிசல் குறைவாகவே இருந்தது. மனதில் படபடப்புடனும், உடலில் களைப்புடனும் தன் ஆட்டோவினை செலுத்தி கொண்டிருந்தான் தாமு. காலை முதல் இடைவிடாது வாகனத்தை செலுத்தி கொண்டிருந்ததால் சற்று சோர்வாகவே இருந்தான். நாளை தன் செல்ல மகள் ரமாவுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை அவன் மனதை இன்னும் சோர்வாக்கியது.

தன் வீட்டினை நோக்கி ஆட்டோவை செலுத்தி கொண்டிருந்த தாமுவை சாலையில் ஒரு ஆண் மறித்தான். ஆட்டோவை நிறுத்த முதலில் தயங்கியவன் பின் அவன் முகத்தில் தெரியும் கலவரத்தை கண்டு ஆட்டோவை நிறுத்தினான்.

திடீரென்று தன் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டதாகவும், அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என ராஜா தாமுவிடம் கூறினான். ராஜாவை அழைத்துக் கொண்டு அவனின் வீடு நோக்கி ஆட்டோவை செலுத்தினான் தாமு. ஆட்டோ ராஜாவின் வீட்டை அடைவதற்கு முன்னரே அவன் மனைவியை அவன் அம்மா வீட்டிற்கு வெளியே அழைத்து கொண்டு வந்து தயாராக இருந்தான்.

மூவரையும் அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையை நோக்கி ஆட்டோவை செலுத்தினான் தாமு. உஷாவின் அலறல் குரல்கள் ஆட்டோவை மிரட்டினாலும் தாமுவின் மனது தன் மகள் ரமாவை சுற்றியே வலம் வந்தது. வீட்டுக்குள் நுழையவும் ரமா தன்னை அப்பா என்று ஓடி வந்து கட்டி அனைத்துக் கொள்ளும் நினைவுகளே அவனை ஆளுமை செய்தது.

தன் மகள் ரமாவின் நினைவுகளை மனதில் சுமந்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான் தாமு. உஷாவை தன் கைகளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் ஓடினான் ராஜா. அவர்கள் மருத்துவமனைக்குள் சென்றவுடன் மீண்டும் வீட்டுக்கு கிளம்ப தயாரானான் தாமு. ஆனால் ஆட்டோவில் ஏதோ கோளாறு ஏற்பட அவன் மருத்துவமனை வாயிலிலேயே முடங்கினான்.

முப்பது, நாற்பது நிமிடங்களாகியும் ஆட்டோவில் ஏற்பட்ட கோளாரை சரி செய்ய முடியாததால் மிகவும் எரிச்சலடைந்தான். அந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து ராஜா வெளியே வந்தான். தாமுவை வெளியே கண்ட ராஜா ஓடி வந்து தாமுவை கட்டி அணைத்து கொண்டான். ராஜாவின் கண்களில் இருந்து நீர் பெருக்கெடுக்க தொடங்கியது.

“என் மனைவியையும், புள்ளையையும் காப்பாத்துன தெய்வம் நீ தான்ய்யா” என்று கூறி தாமுவை கட்டி பிடித்தான். தாமுவை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று தன் குழந்தையை தாமுவிடம் காட்டினான். ராஜாவின் தாயும் தாமுவை கட்டி பிடித்து “என் வம்ஸத்தையே காப்பாத்துன தெய்வம்யா நீ. நீயும் உன் புள்ளைகளும் ரொம்ப நாள் நல்லா இருக்கணும்னு வாழ்த்தினான்.

“நல்ல மனம் உள்ளவர்களுக்கு நல்லதே நடக்கும்”. நாளை தாமுவின் மகளுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை நன்கே அமையும் என்ற நம்பிக்கை தாமுவுக்கு பிறந்தது. ராஜாவின் குழந்தையை தூக்கி முகத்தில் முத்தமிட்டு குழந்தையின் குழந்தையின் கையில் ஒரு 100 ரூபாய் நோட்டை வைத்து திணித்து விட்டு மருத்துவமனையில் இருந்து மனமகிழ்ச்சியுடன் வெளியேறினான் தாமு புத்தணர்வுடன்.

Tuesday 29 May 2012

இது கதையா? கவிதையா??


 

அன்று நாராயணன் மிகவும் கவலையுடன் இருந்தான். அவன் காதலி சொன்ன வார்த்தைகள் இன்னும் அவன் காதில் ஒலித்து கொண்டே இருந்தது. “நீயெல்லாம் என்னடா காதலிக்கிற? நம்ம காதலிக்க ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆயிடுச்சு. நீ எனக்காக ஒரு கவிதையாவது எழுதி இருக்கியா? என் தோழி பிரேமா காதலிக்க ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் ஆச்சு. அதுக்குள்ள அவள் ஆளு நாலு கவிதை எழுதி கொடுத்திருக்கான். நீ என்ன பண்ணுவியோ தெரியாது. எனக்கு நாளைக்கு ஒரு காதல் கவிதை எழுதி கொடுக்கிற.” இந்த வார்த்தைகள் தான் நாராயணனுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அப்போது வீட்டிற்கு வந்த நாராயணன் தோழன் வெங்கட் “என்னடா நாராயணா இவளோ சோகமா இருக்க” என்று கேட்க, அன்று காலை நடந்ததை கூறினான். நாராயணன் “நீ தான்டா நான் கவிதை எழுத உதவனும்” என்று வெங்கட்டை நாராயணன் கேட்டான்.

“கவிதை தானடா! விடு டா ஒண்ணும் பெரிய விஷயமில்லை. சாதாரணமா ரேவதியை பத்தி ஏதாவது யோசிச்சு எழுது. அப்படியே நடுவுல மானே, தேனே, பொன்மானே எல்லாம் சேத்துக்கோ அவ்வளோ தான்” என்று சொல்லி விட்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.

ஒரு காகிதத்தை எடுத்து வைத்து தன் காதல் கவிதையை எழுத ஆரம்பித்தான். முதல்ல அவள் அழகை பத்தி எழுதனும்.

“காண கண் கோடி வேண்டும்
உன் அழகை காண தேவதையே
ஆயிரம் இதயங்கள் வேண்டும்
உன் காதலை தாங்கி கொள்ள
மானே! தேனே!! பொன்மானே!!!”

அப்புறம் அவள் அன்பை பத்தி எழுதணும்.
“அன்பின் மறு உருவம் நீ தானே
பண்பின் அடையாளமும் நீ தானே
மானே! தேனே!! பொன்மானே!!!”

வேற என்ன எழுதுறதுனே தெரியலையே. ம்ம்!!! நம்ம காதல் பத்தி எழுதனும்.

“ எல்லைகளற்றது நம் காதல்
உள்ளங்களை இணைத்தது நம் காதல்
உணர்வுகளை ஒன்றாக்கியது நம் காதல்
மானே! தேனே!! பொன்மானே!!!”

இப்படி எழுதி கொண்டிருக்கும் போதே கைபேசியில் தன் காதலியின் அழைப்பு வர கைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தான்.

நாராயணன்: சொல்லு செல்லம்.
ரேவதி: “நான் சொல்றதை மட்டும் கேளு நாராயணா. எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பாத்திருக்காங்க. மாப்பிள்ளை அமெரிக்காவுல வேலை பாக்குறாரு. எனக்கும் அமெரிக்காவுல போய் செட்டில் ஆகுறது தான் நல்லதுனு தோணுது. காதல் எல்லாம் எனக்கு ஒத்து வராதுனு தோணுது.
நாராயணன்: ஆனா நான் உன்னை ரொம்ப விரும்புறேன் ரேவதி. நீ இல்லாத வாழ்க்கைய நினைச்சு கூட பார்க்க முடியலை.
ரேவதி: சும்மா லூசு மாதிரி பேசாதடா. உனக்கு வேற ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா. இப்ப நம்ம பிரியுறது தான் சரியா இருக்கும். இனிமே என்னை காதலிக்கிறேனு சொல்லிட்டு எதுவும் தொல்லை பண்ணாதே என்றாள்.

இதை கேட்டவுடன் நாராயணனுக்கு என்ன செய்யுறதுனே தெரியலை. இப்படி பொசுக்குனு பிரிஞ்சுருவோம்னு சொல்லுவானு நாராயணன் எதிர்பார்க்கவே இல்லை. உடல் முழுவதும் வியர்த்து கொட்ட ஆரம்பிக்க வீட்டு ஜன்னலை சென்று திறந்து வைத்தான். காற்று பலமாக அடிக்க அவன் எழுதி வைத்திருந்த கவிதை பேப்பர் பறந்து சென்று அருகில் இருந்த தண்ணி வாளியில் விழுந்தது. சோகமாக சென்று நாராயணன் டி‌வியை போட

“நேயர்கள் விருப்பத்திற்கு இணங்க அவர்களுக்கான பாடல் மயக்கமென்ன படத்தில் இருந்து” என்று டி‌வி தொகுப்பாளினி கூற

“காதல் என் காதல் கண்ணீருல
போச்சு அது போச்சு தண்ணீருல”

என்று பாட்டு ஆரம்பிக்க, கோபத்துடன் டி‌வியை அமத்தி விட்டு சென்று படுக்கையில் விழுந்தான் நாராயணன்.



Monday 21 May 2012

போட்டி கவிதை




நாடி கவிதை போட்டியில் பரிசு பெற்ற என் கவிதை

"நீர் வளம் காக்க மானுடம்
செயலிட்ட சொட்டு நீர் பாசனம்
பச்சை தாவரங்களுக்கு மட்டில்லை இனி
பட்சிகளுக்கும் தான் பொருந்தும்"


http://nadikavithai.blogspot.in/2012/05/blog-post.html