Friday 24 February 2012

பயணம்

சில பயணங்கள் சுகமாய் அமைவது உண்டு. சில பயணங்கள் சுமையாய் அமைவது உண்டு. சில பயணங்கள் நம் வாழ்க்கையையே மாற்றி அமைத்து விடும். அது போன்ற ஒரு பயணத்தை கதையாக எழுத முற்பட்டுள்ளேன்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இரவு 7.00 மணி. அன்று பேருந்து நிலையம் சிறிது நெரிசல் குறைந்தே இருந்தது. 55 பி பஸ்ஸில் இருந்து நெற்றி நிறைய திருநீருடனும் கையில் மஞ்சள், சிவப்பு, கருப்பு என்ற நிறங்களில் ஆன கயிறுகளுடனும் ஒருவன் இறங்கினான். அது வேற யாரும் இல்லங்க. நம்ம கதாநாயகன் சரவணன் தான். மறுநாள் காலை சென்னையில் நடைபெற இருக்கும் ஒரு நேர்முக தேர்வில் பங்குபெற சென்னை செல்வதற்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து வந்திருக்கவன் தான் நம்ம ஹீரோ.

சரவணன் பேருந்தில் ஏறி 40 நிமிடங்கள் ஆகியும் பேருந்தை எடுப்பது போல தெரியவில்லை. சென்னை, திருச்சி என்ற குரல்கள் மட்டும் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. மிக பெரிய போராட்டதிற்க்கு பின் பேருந்து மாட்டுத்தாவணியில் இருந்து கிளம்பியது. வண்டி பேருந்து நிலையத்தை விட்டு வெளியேற இருந்த நேரத்தில் நீல நிற ஜீன்ஸ் பேண்டுடனும், வெள்ளை நிற சட்டையுடனும் மிக கம்பீரமான தோற்றத்துடனும் கூடிய 40 வயதை எட்டிய ஒருவர் பேருந்தில் ஏறினார். அவர் தான் ராகுல் சம்பத். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிபவர். நேராக வந்து சரவணின் அருகில் அமர்ந்தார். சரவணன், சம்பத் இருவருக்குமான உரையாடல்கள் இங்கே.

சம்பத்: என்ன தம்பி சென்னையா? (மனதிற்குள்: திருச்சியிலேயே இறங்கிட்டான நல்லது. நல்ல நெரிசல் இல்லாம உட்காரலாம்).

சரவணன்: ஆமா ஸார். சென்னை தான். ( மனதிற்குள்: ஹாயா உட்கார்ந்திருந்தேன். இப்படி நந்தி மாதிரி வந்து இடிச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டாரே!!).

சம்பத்: ஓ!! என் பேரு சம்பத். நானும் சென்னை தான் போறேன். நீ சென்னையில எங்க போற?

சரவணன்: ஒரு இன்டர்வியூக்கு போறேன் ஸார்.

சம்பத்: ஓஹோ!! என்னப்பா படிச்சுருக்க?

சரவணன்: BE. சிவில் இன்ஜினியரிங் ஸார். முடிச்சு 2 வருஷம் ஆச்சு.

சம்பத்: 2 வருஷமா எங்க வேலை பாத்துக்கிட்டு இருந்தப்பா?

சரவணன்: இல்லை ஸார். அப்பா கூட காண்ட்ராக்ட் வேலை பாத்துக்கிட்டு இருந்தேன்.

சம்பத்: ஓ. காண்ட்ராக்ட் வேலைனா நிறைய சம்பாதிக்கலாமே. கருப்பாவும் வெள்ளையாவும்.

சரவணன்: அப்படி எல்லாம் ஒட்டு மொத்தமா சொல்லாதீங்க. இந்த தொழில்லயும் எங்கள மாதிரி சில நேர்மையான ஆட்கள் இருக்காங்க.

சம்பத்: அப்ப உனக்கு பணம் சம்பாதிக்க ஆசை இல்லையா?

சரவணன்: இருக்கு. எப்பவும் முதலாளியா இருக்கணும். உழைச்சு நிறைய சம்பாதிக்கணும். நமக்கு கீழே 10,15 பேர் வேலை பாக்கணும். ஆனா அப்பா என்னை ஒரு வேலைக்கு போக சொல்லி கட்டாய படுத்துறாரு.

சம்பத்: ஏன் உங்க அப்பா கட்டாயபடுத்துறாரு?

சரவணன்: கொஞ்சம் தொழில்ல நஷ்டம் ஸார். அதான் அப்பா இப்படி பண்றாரு. ஒரு ரூபா போட்டா பத்து ரூபா நாலு மாசத்துல சம்பாதிக்கலாம். அதை விட்டுட்டு என்னை வேலைக்கு போக சொல்றாரு.

சம்பத்: அப்ப உனக்கு வேலைக்கு போக சுத்தமா இஷ்டம் இல்லையா?

சரவணன்: ஆமா ஸார்.

சம்பத்: சரி பா. கொஞ்சம் குளிர்ரா மாதிரி இருக்கு. ஜன்னலை மூடி வச்சிரலாமா?

சரவணன்: சரி ஸார்.

ஜன்னலை மூடி இரண்டு நிமிடத்தில் சரவணின் குறட்டை சத்தம் பேருந்தில் தூங்கி கொண்டிருந்த அனைவரையும் தட்டி எழுப்பியது. மறுநாள் காலை தன் கிராமத்து உருவத்தினை முழுவதுமாய் கலைத்து விட்டு நேர்முகத் தேர்வுக்கு கிளம்பினான் சரவணன். நேர்முக தேர்வு அறைக்குள் நுழைந்த சரவணனுக்கு மிக பெரிய அதிர்ச்சி. அங்கே தேர்வாளராக அமர்ந்திருந்தவர் சம்பத்.

சரவணனை கண்ட சம்பத், வா பா வந்து உட்காரு என்று அழைத்தார். சரவணன் அமர்ந்ததும் தம்பி உனக்கு இந்த வேலை ஒத்து வராது. இந்த வேலைக்கு உரித்தான தகுதி உன்கிட்ட இல்லை என்று எடுத்த எடுப்பிலே சாட்டையை சுழற்றினார். இனி என்ன சொன்னாலும் இந்த வேலை தனக்கு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டு சரவணன் தன் இருக்கையில் இருந்து எழுந்தான்.

எழுந்தவனை மீண்டும் அமர சொன்னார் சம்பத். உட்காருப்பா. என்ன சாப்பிடுற? காபி'யா டீ'யா என்று பேச்சை மாற்றினார் சம்பத். பின் இருவருக்கும் காபி வரவழைக்கப்பட்டது. பிறகு சம்பத் தன் பேச்சினை மீண்டும் தொடர்ந்தார். நீ நேர்முகத் தேர்வுக்கு வந்த வேலை உனக்கு பொருத்தமா இருக்காது. ஆனா எங்க கம்பெனில இன்னொரு வேலை இருக்கு. ஆமா பா. பிசினஸ் டெவலப்மெண்ட் (தொழில் விரிவாக்க) துறைல ஒரு வேலை இருக்கு. அது உனக்கு தகுதியான வேலை. இதுல உனக்கு சம்பளம் போக கம்பெனிக்கு உன்னால கிடைக்குற லாபத்துல ஒரு பங்கும் இருக்கு.

உன்ன மாதிரி தொழில் பக்தியும், தொழில்ல ஜெயிக்கணும்னு வெறியும் இருக்கவங்க தான் இந்த வேலைல சாதிக்க முடியும். என்ன பா? இந்த வேலை உனக்கு ஓகே வா? இல்லை ஊருக்கு போகணுமா என்றார். சரவணனும் இந்த வேலையில் சேர சம்மதித்தான். அன்று முதல் சரவணன் தொழிலில் நேர்த்தியுடனும், வியாபார உக்தியுடனும் அந்த அலுவலகத்தில் பணி புரிந்தான். அவன் நேர்மையும், விடாமுயற்சியும் அந்த நிறுவனத்தை மிக பெரிதாய் வளர்த்தது.

5 வருடம் ஆகிறது சரவணன் இந்த வேலையில் சேர்ந்து. இப்போது சரவணனும் அந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரர். சரவணனை போன்று நம்முள் பல இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடனும், ஆர்வத்துடனும் உள்ளனர். அவர்கள் ஆர்வத்தை அறிந்து அவர்களுக்கு சரியாக தீணி போட வேண்டியது இந்த சமுதாயத்தின் கடமை.

Monday 20 February 2012

காதலுக்கு காது இல்லை


அன்று மகாபலிபுரம் மிகவும் நெரிசலாகவே இருந்தது. எவ்வளவு தேடியும் ரகுவுக்கும், சுதாவுக்கும் ஒரு மறைவான (சாரி! சாரி!!) தனிமையான இடம் கிடைக்கவில்லை. இருந்தாலும் விடாம தேடி பிடிச்சு, ஒரு பாறையின் மீது ஏறி அமர்ந்தனர். அப்புறம் என்னங்க!! பாறை மேல உட்கார்ந்துக்கிட்டு சுட சுட கடலையை வறுத்தாங்க. 

கடலை பாட்டுக்க ஒரு பக்கம் போய்கிட்டு இருக்க இன்னொரு பக்கம் ரகு அந்த பாறையின் மேல் கிடந்த சிறு கற்களை எடுத்து கீழே வீசிக் கொண்டிருந்தான். கடலை நல்லா கருகிட்டு இருந்துச்சுங்க. திடீர்னு சிவபூஜைல கரடி நுலைஞ்ச மாதிரி 2 இளைஞர்கள் மேல் ஏறி வந்தாங்க. வந்தவர்கள் நேராக ரகுவை நோக்கி சென்று அவன் சட்டையை பிடித்து பளார்!! பளார்!!! என்று அவன் கன்னத்தில் அறைந்தனர்.

நிலை தடுமாறிய ரகுவை சுதா தாங்கி பிடித்தாள். பின் சுதா “ அடிங்க!! ஆனா ஏன் அடிக்கிறீங்கனு சொல்லிட்டு அடிங்க “ என்று அந்த இளைஞர்களிடம் கேட்டாள். ரகு மேலே இருந்து வீசிய கற்கள் அனைத்தும் அவர்கள் மேல் விழுந்தன. அவர்கள் பல முறை கூப்பிட்டும் அது ரகு, சுதாவின் காதுகளில் விழவே இல்லை. காதலுக்கு கண்கள் மட்டும் தான் இல்லை என்று நினைத்தோம். இப்போது தான் தெரிந்தது காதும் இல்லை என்று!!! 

Sunday 19 February 2012

கல்லூரி காதல்

“எவன் டி உன்ன பெத்தான்....கையில கிடைச்சா செத்தான்” என்ற STR’ன் குரல்கள் காதினை நிறைத்து கொண்டிருக்கும் வேலையிலியே பேருந்து கல்லூரிக்குள் நுழைந்தது. மனதில் நிறைய ஆசைகளுடனும், கனவுகளுடனும் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தான் விஜயன். பொறுங்க!! பொறுங்க!! விஜயன் கல்லூரியில் புதுசா சேர்ந்திருக்குற ஸ்டூடண்ட் இல்லங்க!! புதுசா சேர்ந்திருக்கும் பேராசிரியர்.

விஜயன் நேராக பாலகிருஷ்ணனை பார்க்க சென்றான். மன்னிச்சுக்கங்க உயர்திரு. மாண்புமிகு. திரு. பாலகிருஷ்ணன் ஐ‌யா அவர்களை பார்க்க சென்றான் விஜயன். புரிஞ்சுருச்சா! ஆமாங்க பால்கி தான் கல்லூரியின் முதல்வர். பால்கியிடம் மிகவும் அடக்கியே வாசித்தான் விஜயன். விஜயனை அழைத்து கொண்டு சிவபிரகாசத்தை பார்க்க சென்றார் பால்கி. சிவபிரகாசம் கல்லூரியின் கட்டிடவியல் (Civil Engineering) துறைக்கான தலைவர். விஜயன் சிவபிரகாசத்திடமும் மிகவும் அடக்கியே வாசித்தான்.

சிவபிரகாசம் விஜயனிடம் ஆசிரியர் பணியின் பொறுப்பறிந்து நடந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். விஜயனின் காதுகள் மட்டுமே சிவபிரகாசத்தை கவனித்துக் கொண்டிருந்தது. மற்ற அனைத்து புலன்களும் ஆய்வகத்தில் நின்று கொண்டிருந்த மூன்று மாணவிகளையே நோட்டமிட்டு கொண்டிருந்தது. விஜயனிற்கு வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும் உணர்வினை ஏற்படுத்தியது. தனது கல்லூரி காலத்தில் அழகான பெண்களை கண்டால் அடிக்கடி விஜயனிற்கு ஏற்படும் உணர்வு தான் இந்த பட்டாம்பூச்சி நோய். இன்று மீண்டும் அவனுக்கு அந்த நோய் வந்ததை அவன் உணர்ந்தான்.

எதையோ நினைத்தவனாய் மீண்டும் சிவபிரகாசத்திடம் தன் கவனத்தை திருப்பினான். தனக்குள்ளேயே “ அடக்கு, அடக்கு” என்று கூறிக் கொண்டான். சிவபிரகாசம் விஜயனை இரண்டாம் ஆண்டு வகுப்பறைக்குள் அழைத்துச் சென்றார். முதல் முறையாய் வகுப்பறைக்குள் ஆசிரியராய் நுழையும் விஜயனிற்கு, முதல் நொடியிலேயே பட்டாம்பூச்சி உணர்வு ஏற்பட்டது. இம்முறை இந்த உணர்வு ஏற்பட்டதற்க்கு மாணவிகள் யாரும் பொறுப்பில்லை. வகுப்பில் படம் நடத்தி கொண்டிருந்த பேராசிரியை அமுதாவே அதன் காரணம்.

அமுதா அந்த கல்லூரியில் இரண்டு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தவள். சேர்ந்த இரு மாதங்களிலேயே மாணவர்களிடமும், சக ஆசிரியர்களிடமும் நல்ல மதிப்பை பெற்றிருந்தாள். சிவபிரகாசம் விஜயனை, மாணவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். பிறகு விஜயனை பார்த்து கை நீட்டி ஏதாவது பேசுங்கள் என்று சைகையிலேயே உத்தரவிட்டு வெளியே சென்றார். இதற்காகவே கடந்த சில நாட்களாய் பயிற்சி செய்து வந்த விஜயன், தான் மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளை மாணவர்களிடம் ஒப்புவிக்க ஆரம்பித்தான். தான் ஒப்புவித்தலை முடித்து விட்டு விஜயன் அமுதாவிடம் சென்று, “மன்னிச்சுக்கோங்க. வகுப்பு நேரத்துல வந்து உங்களுக்கு இடைஞ்சல் கொடுத்துவிட்டேன்” என்று அசட்டு புன்னகையுடன் வழிந்தான். பின் அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அமர்ந்தான்.

முதல் வேலையாக கணினியில் கல்லூரிக்கான வலைத்தளத்தினை திறந்து அதில் கட்டிடவியல் துறைக்கான பேராசிரியர்கள் பட்டியலை நோட்டமிட்டான். அதில் தனது புகைப்படத்தை பார்த்து மிக குஷியானான் விஜயன். பின் அமுதாவை அந்த பட்டியலில் தேடினான். அப்பட்டியலில் அவளின் பெயர் செல்வி. அமுதா என்று எழுதப் பட்டிருப்பதை பார்த்ததும் மிகவும் பூரிப்படைந்தான் விஜயன்.

இரண்டமாண்டு மாணவர்களுக்கு தினமும் முதல் வகுப்பு அமுதாவே எடுத்து வந்தாள். அடுத்த வகுப்பு விஜயனிற்கு என்று ஒதுக்கப்பட்டது. முதல் வகுப்பிற்கான நேரம் முடிவதற்க்கு 10 நிமிடம் முன்னதாகவே சென்று வகுப்பின் முன் நிற்க ஆரம்பித்தான் விஜயன். வகுப்பு எடுக்க அவனுக்கு இருந்த ஆர்வத்தினால் அல்ல. அமுதாவை நோட்டமிடவே. (தூய தமிழ்ல சொன்னா சைட் அடித்தான்).

அடிக்கடி நூலகத்திற்க்கு செல்ல ஆரம்பித்தான். புத்தகங்களில் இருந்து உரை எடுப்பதற்காக அல்ல. அமுதாவிடம் அரட்டை அடிக்கவே. அதுக்குள்ளே எப்படி அரட்டை அளவுக்கு போய்ட்டானு யோசிக்கிறீங்களா? முதலில் புத்தங்கள் சம்மந்தமாக தான் பேச ஆரம்பித்தான். பிறகு அதன் ஆசிரியர்கள் சம்மந்தமாக, அப்புறம் சக ஆசிரியர்கள், மாணவர்கள் இப்படியே போய் இப்போல்லாம் சகஜமா அரட்டை அடிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டான். இப்படியே போன இவர்களின் நட்பு, நாளடைவில் மிக நெருக்கமான உறவாய் மாறியது. சிவபிரகாசம் இவர்களை இரண்டமாண்டு மாணவர்களுடன் பெங்களூர் சுற்றுலா செல்ல அணுப்பி வைத்தார்.

சுற்றுலாவின் இரண்டாம் நாள், ஒரு அழகிய மாலை பொழுதில் தன் காதலை அமுதாவிடம் வெளிப்படுத்தினான் விஜயன். முதலில் அதை மறுத்த அமுதா, சுற்றுலாவின் இறுதி நாள் விஜயனின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தாள்.

இப்போதெல்லாம் விஜயன் வகுப்புக்கு 10 நிமிடங்கள் முன்னதாக வருவ்து இல்லை. ஏனெனில் அமுதாவே 10 நிமிடங்கள் தாமதமாக தான் வகுப்பினை முடித்துக் கொள்கிறாள். காரணம் உங்களுக்கே தெரியும். அவ்வளவு ஆழமான காதலாங்க. (தமிழ்ல சொன்னா டீப் லவ்).

விஜயன் அமுதாவின் காதல் படலம் வகுப்பறை, நூலகம், கல்லூரி உணவகம், துறை ஆய்வகங்கள் என்று பல இடங்களிலும் பரவியது. போட்டு கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கும் சில சக ஆசிரியர்கள், இவர்களை பற்றி துறை தலைவரிடம் பற்ற வைத்தனர். இதனை துறை தலைவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் ஒரு நாள் அவரின் முன்னரே இவர்களின் காதல் படலம் அரங்கேறியது. இதை கண்ட சிவபிரகாசம் மிகவும் கோபமடைந்தார். இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தார் சிவபிரகாசம்.

இந்த எச்சரிக்கைகளுக்கு பயந்தவர்களாய் தெரியவில்லை விஜயனும், அமுதாவும். இரண்டு நாள் அடக்கி வாசித்தார்கள். பிறகு வழக்கம் போல இவர்களின் காதல் படலம் தொடர்ந்தது. இந்த மாதிரி போய்கிட்டு இருந்த கதைல ஒரு பெரிய திருப்பங்க( அதான் ட்விஸ்ட்).

ஒரு நாள் இவர்களின் காதல் படலம் கல்லூரி உணவகத்தில் அரங்கேறி கொண்டிருக்க அதை பால்கி பார்த்துட்டார். அவர் தாங்க உயர்திரு. மாண்புமிகு. திரு. பாலகிருஷ்ணன் ஐயா, கல்லூரி முதல்வர். மறந்துட்டீங்களா!! விஜயன், அமுதா மேல் நடவடிக்கை எடுக்கும்படி பால்கியிடம் இருந்து சிவபிரகாசதிற்கு உத்தரவு வந்தது.

அவர்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்து சிவபிரகாசம், பால்கியின் உத்தரவை விஜயனிடமும், அமுதாவிடமும் கூறினார். பின் விஜயனிடமும், அமுதாவிடமும் நீங்களாகவே இன்னும் 10 நாட்களில் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு கல்லூரியை விட்டு செல்லும்படி கூறினார். இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மூன்று நாட்கள் யோசித்து பிறகு ஒரு முடிவுக்கு வந்தனர்.

பத்தாவது நாள் காலை சிவபிரகாசதின் அறைக்கு கையில் ஒரு கவருடன் விஜயனும், அமுதாவும் நுழைந்தனர். அந்த கவரினை சிவபிரகாசதிடம் கொடுத்தனர். அதை பார்த்து விட்டு பின் இருவரிடம் கைகளை சந்தோசத்துடன் குலுக்கினார் சிவபிரகாசம். என்னங்க யோசிக்கிறீங்க!! விஜயனும், அமுதாவும்’ கொடுத்த கவர் அவர்களின் கல்யாண பத்திரிக்கை. அதை பார்த்த சிவபிரகாசம் இருவரையும் வாழ்த்தி அனுப்பினார். அடுத்த நாள் பால்கி கூட வந்து வாழ்த்தினர்.

இப்போல்லாம் விஜயனுக்கு அந்த ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடிச்சு பறக்குற உணர்வு வர்றதே இல்லங்க. ஒரே ஒரு பட்டாம்பூச்சி தாங்க!!!