Saturday 25 April 2015

நானும் கடவுளும் – வேடிக்கை மனிதர்கள் 2

சிறு வயது முதலே எனக்கு  கடவுள் நம்பிக்கை கிடையாது. பள்ளி நாட்களிலேயே பெரியார், அண்ணா போன்றோரின் பகுத்தறிவு சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். வீட்டில் எல்லோரும் கோவிலுக்கு செல்லும் நேரங்களில் நான் மட்டும் வீட்டிலேயே தங்கி விடுவேன். கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு முறை கூட கோவிலுக்கு சென்றதில்லை.

இதனாலேயே பலமுறை எனக்கும் என் அப்பாவிற்கும் வீட்டில் விவாதம் ஏற்படுவது உண்டு. பல முறை அன்பாகவும் சொல்லிவிட்டார், கண்டித்தும் சொல்லிவிட்டார். என்னால் என் பிடிப்பிலிருந்தும் கொள்கைகளிலிருந்தும் பின் வாங்க முடியவில்லை.

அன்று எனக்கு வேலைக்கான நேர்காணல் இருந்தது. பொறியியல் பட்டபடிப்பை முடித்து ஆறு மாதம் முடிந்து விட்டது. இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கை என்னுள் நிறையவே இருந்தது. ஆனால் நான் நாத்திகம் பேசுவதால் தான் எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று என் உறவினர்கள் பலரும் பேச ஆரம்பித்து இருந்தார்கள். என் அப்பாவும் கூட அப்படி தான் எண்ணியிருந்தார்.

மதியம் இரண்டு மணிக்கு தான் நேர்காணல். ஆனால் காலை ஆறு மணி முதலே வீட்டில் பூஜையை ஆரம்பித்து விட்டார்கள். பூ, பழம், சூடம், ஊதுவர்த்தி என்று எல்லாம் வைத்து சாமி கும்பிட ஆரம்பித்து விட்டார்கள். “ என்ன அம்மா? சாமிக்கு பூ, பழம்’லாம் லஞ்சம் கொடுத்துக்கிட்டு இருக்கீங்களா. சாமிக்கு கொடுக்கிற லஞ்சத்தை எனக்கு நேர்காணல் எடுக்குற ஆசாமிக்கு கொடுத்தீங்கனா எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சிரும் அம்மா” என்றேன். அப்பா கோபமுடன் “வாயை மூடிட்டு, நீ படிக்குற வேலைய பாரு. இதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்” என்றார்.

மதியம் ஒரு மணி வாக்கில் நேர்காணலுக்கு கிளம்ப தயாராயிருந்தேன். அம்மா கையில் விபூதி தட்டுடன் வந்து என் நெற்றியில் விபூதி பூசி விட்டாள். நான் உடனே விபூதியை அழித்துவிட்டு, “என் திறமைக்கு வேலை கிடைச்சா போதும். இந்த சாம்பல் பூசுறதுனால எனக்கு ஒரு வேலை கிடைக்கும்’னா, அப்படி ஒரு வேலையே எனக்கு வேண்டாம்” என்றேன். மீண்டும் அப்பா கோபமுடன் “நேர்காணலுக்கு போற நேரத்துல இப்படி எதிர்மறையா பேசாதடா. நல்லபடியா முடிச்சுட்டு வேலையோட வாடா’ என்றார்.

இரண்டு மணி என்று கூறியவர்கள் மாலை ஐந்து மணிக்கே என்னை நேர்காணலுக்கு அழைத்தார்கள். முதலில் என் பொறியியல் துறை (கட்டிடவியல்) சார்ந்த சில கேள்விகளை ஒருவர் கேட்டார். நானும் என்னால் முடிந்தவரை அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். அவரின் நேர்காணல் முடிந்த பின் மனிதவள துறை மேலாளரை (HR மேனேஜர்) சந்திக்க சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள்.

ஒருவர் வழுக்கை தலையுடன் நெற்றி நிறைய விபூதி பூசி கொண்டு உட்கார்ந்து இருந்தார். அவரை பார்த்ததும் எனக்கு கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டது. “HR மேனேஜர்’லாம் நல்ல சட்டை போட்டு வருவாங்கனு தான் கேள்விபட்டிருக்கேன். நல்ல பட்டை போட்ட HR மேனேஜர இன்னிக்கு தான் பார்க்கிறேன்”

அவர் முதலில் என்னை பற்றியும் நான் படித்த கல்லூரி பற்றியும் சில விவரங்களை கேட்டு கொண்டார். பின் எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறேன் என்பது பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். அடுத்ததாக “இந்து மதத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்றார்.

“எனக்கு கடவுளின் மீதும் நம்பிக்கை கிடையாது. மதங்களின் மீதும் நம்பிக்கை கிடையாது. எனக்கு இந்து மதத்தை பற்றியும் தெரியாது, இஸ்லாமும் தெரியாது, கிறிஸ்துவமும் தெரியாது. உலகத்துல இருக்க எல்லாரும் ஒரே ஜாதி தான்; மனித ஜாதி. நாம எல்லாரும் ஒரே இனம் தான்; தமிழ் இனம்” என்றேன்.

“அப்ப நீங்க நாத்திகனா” என்றார் HR. “இல்லை. பகுத்தறிவாதி” என்றேன் நடிகர் கமலஹாசன் பாணியில். “இந்த வேலையா. இல்லை உங்கள் பகுத்தறிவு கொள்கைகளா என்றால் எதை தேர்வு செய்வீர்கள்” என்றார். என் கொள்கைகளை தான் என்றேன். அவர் சிரித்து கொண்டே “ அப்ப உங்களுக்கு வேலை முக்கியம் இல்லையா?” என்றார். “வேலைக்கும் என் பகுத்தறிவு சிந்தனைகளுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்டேன்.

“சும்மா கேட்டேன் தம்பி. உங்களுக்கு வேலை கிடைச்சிருச்சு. இரண்டு நாளில் வேலையில் சேர்ந்திருங்க” என்றார். நான் அவரிடம் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

தொலைபேசியில் வீட்டிற்கு அழைத்து அம்மாவிடம் வேலை கிடைத்த விவரத்தை தெரியபடுத்தினேன். அம்மா “ ரொம்ப சந்தோஷம் தங்கம். நான் கும்பிட்ட சாமி நம்மளை கை விடலை. வேகமா வீட்டுக்கு வந்துரு. நான் உனக்கு பிடிச்ச இடியாப்பம் செஞ்சு தர்றேன்” என்றார். நானும் விரைவிலேயே பேருந்து நிலையத்தை அடைந்தேன்.

அப்போது ஒரு பள்ளி மாணவன் என்னை இடித்து கொண்டு சாலையில் ஓடினான். ஏற்கனவே கிளம்பியிருந்த பேருந்தை நோக்கி வேகமாக ஓடினான். படியில் ஏற முற்பட்ட போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டான். கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நடந்து விட்டது. தலையில் நன்றாக அடிபட்டிருந்தது. நானும் என் அருகே நின்று கொண்டிருந்த இன்னொருவரும் சேர்ந்து அந்த பையனை மருத்துவமனையில் சேர்த்தோம்.

தலையில் அடிபட்டதால் இரத்தம் அதிகமாக வெளியேறி விட்டதாகவும், உடனடியாக ‘ஒ நெகட்டிவ்’ (O-ve) இரத்தம் தேவைபடுகிறது என்றார்கள். நான் உடனே என்னோடது O-ve தான். நான் கொடுக்கிறேன் என்றேன்.

என் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு; எல்லாம் சரியாக இருக்க, என் உடம்பில் இருந்து இரத்தத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். இன்னொருபக்கம் அந்த மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கபட்டு, அவர்களும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்.

பிறகு இரவு ஒன்பது மணிவாக்கில் மருத்துவர் வந்து “பையன் பிழைச்சுட்டான். இனி எந்த பிரச்சினையும் இல்லை. சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்ததால தான் காப்பாத்த முடிஞ்சது” என்றார்.

அந்த பையனின் தந்தை என் கைகளை பற்றி கொண்டு அழ ஆரம்பித்தார். அவர் மனைவி “ ஐயா... நீங்க நல்லா இருக்கணும். எங்க குலத்தையே காப்பாத்தி கொடுத்துருக்கீங்க. நீங்க தான்’யா எங்க குலசாமி” என்று அழுது கொண்டே கூறினாள். நான் அவர்களை சமாதானபடுத்திவிட்டு கிளம்பினேன்.

“எனக்கு சாமி மேலயே நம்பிக்கை இல்லை. இந்த அம்மா என்னைய போயி குலசாமி’னு  சொல்லுதே. நல்ல வேடிக்கை தான்” என்று எனக்கு நானே சொல்லி கொண்டேன். அடுத்தவர்கள் மேல் செலுத்தும் அன்பு தான் கடவுளோ என்ற எண்ணம் எனக்குள் சிறிதாய் எழ ஆரம்பித்தது. நீங்க சொல்லுங்க. கடவுள் இருக்காரா?? இல்லையா??

Thursday 2 April 2015

கார்க் பந்தும் காத்திருந்த கண்களும்

பள்ளி நாட்களில், விடுமுறை என்றாலே கிரிக்கெட் ஒன்று தான் எங்களின் பொழுதுபோக்கு. பல நாட்கள் மதிய உணவு எடுத்து கொள்ளாமல் கூட நானும் என் தம்பியும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம்.

“இந்த கொளுத்துர வெயிலிலே, நாய் கூட வெளிய வராது. இந்த கத்திரி வெயிலிலே விளையாட போறீங்களே” என்று பலமுறை வீட்டிலே அக்கறையுடன் கூறி (திட்டி) இருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் எங்கள் காதுகளை எட்டுவதுற்கு முன்னே, நாங்கள் தெரு முனையை கடந்து இருப்போம். போருக்கு ஆயத்தம் ஆனவர்களை போல், ஒருவர் கையில் கிரிக்கெட் மட்டையுடனும் மற்றொருவர் பந்துடனும் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி கிளம்பி இருப்போம். அரசு உயர்நிலை பள்ளி மைதானம் தான் எங்களின் போர்க்களம்.

அன்றும் மதிய உணவிற்கு பின் ஆட்டம் ஆரம்பித்து இருந்தது. முதலில் களம் இறங்கிய கிடா குமாரு முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தான். பின் எங்களிடம் வந்து “ச்ச இன்னிக்கு எந்த மூஞ்சில முழிச்சேனே தெரியல, இப்படி ஆயிடுச்சே”னு புலம்ப ஆரம்பித்தான். இது குமாரின் காப்புரிமை (COPY RIGHTED) பெற்ற புலம்பல். “கண்ணாடிய பாத்திருப்ப கிடா” என்ற பதில் கும்பலில் இருந்து வந்தது. அனைவரின் முகத்திலும் சிரிப்பு. பின் ஆட்டம் தொடர்ந்த சிறிது நேரத்திலேயே பந்து உடைந்து விட்டது.

ஸ்டம்பர் நிறுவனத்தின் ரப்பர் பந்துகள் மிக தரமானதாகவே இருக்கும். ஆனாலும் அன்று எப்படியோ உடைந்து விட்டது. பந்தை எப்படியாவது அடித்து தொலைத்து விட வேண்டும் என்ற குறிக்கோளோடு விளையாடும் மட்டையாளர்களிடம் சிக்கி தவிக்கும் பந்துகள் படும் பாடு சொல்லவா வேண்டும். இந்த பந்துகளுக்கு உயிர் இருந்திருக்குமேயானால் அவை உருண்டு, பிரண்டு\, கத்தி, கதறி அழுது இருக்கும். மாற்று பந்து இல்லாததால் ஆட்டம் சிறிது நேரம் தடை பட்டு இருந்தது. புதிய பந்து வாங்க, எனது மிதிவண்டியை எடுத்து கொண்டு ஆனந்த் ஊருக்குள் சென்றான்.

அரசு பள்ளி, ஊரின் நுழைவாயிலில் அமைந்து இருந்தது. ஊரின் மைய பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால், பள்ளி மைதானத்தை சுற்றி உள்ள சாலை வழியாக தான் செல்ல முடியும். சாலையை சுற்றி செல்வது என்பது கொஞ்சம் தூரமாக இருப்பதால் பலர் மைதானத்தின் ஓரமாகவே நடந்து செல்வர். சுவற்றில் அடித்த பந்தை போல திரும்பினான் ஆனந்த். ”என்ன டா பால் (பந்து) எங்க?” என்று இளங்கோ கேட்க “ஆவின் பால் இருக்குன்றான், ஆரோக்யா பால் இருக்குன்றான், மாட்டு பால் இருக்குன்றான், ஆட்டு பால் இருக்குன்றான், ஆனா கிரிக்கெட் பால் மட்டும் இல்லையாம் டா. பண்ணையிலயே இல்லையாம்” என்றான் ஆனந்த். “ஆரம்பிச்சுட்டியா டா உன் மொக்கையா. சரி பால்க்கு இப்போ என்ன டா பண்றது?” என்றான் கண்ணன்.

அனைவரும் ஆலோசனையில் ஆழ்ந்தோம். திடீரென்று அரவிந்த்க்கு வீட்டில் இருக்கும் கார்க் பந்து ஞாபகத்திற்க்கு வர, நண்பர்களிடம் அதை எடுத்து வர்றேன் என்று கூறி வீட்டுக்கு கிளம்பினான். கார்க் பந்துகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உபயோகிக்கபடும் பந்துகளை போன்ற நிறம், உருவம் கொண்டதாய் இருக்கும். புதிய பந்துகள் மிக பளபளப்பாகவும், சராசரி எடை உள்ளதாகவும் இருக்கும். ஆனால் பழசாக பழசாக மிக சொரசொரபாகவும், மிகுந்த எடை உள்ளதாகவும் மாறும். மிக சரியாக சொல்ல வேண்டும் என்றால் கல் பந்து போல் இருக்கும்.

உண்மையாகவே ஒரு கல்லினை தான் அன்று அரவிந்த் எடுத்து வந்திருந்தான். ஆட்டம் மீண்டும் புதிதாய் ஆரம்பித்தது. தானே மீண்டும் முதலில் களம் இறங்குவேன் என்று அடம்பிடித்து, தொடக்க ஆட்டக்காரனாக கிடா குமார் மீண்டும் களமிறங்கினான். ஆட்டம் மிக விறுவிறுப்பாகவே நகர்ந்தது.

அப்போது பந்து வீச முத்து தயார் ஆனான். முத்து பந்தினை மிக வேகமாக வீச கூடியவன். கார்க் பந்து மூலம் அன்று கிடா குமாரை பதம் பார்க்க போகிறான் என்றே நினைத்தோம். நாங்கள் நினைத்ததை போல் முதல் இரண்டு பந்துகள் அவன் கால் முட்டியை உரசியே சென்றது. மூன்றாவது பந்தினை இன்னும் சற்று வேகமாகவே வீசினான் முத்து. கண்ணை மூடி கொண்டு மட்டையை சுழற்றினான் கிடா. அவனையே அறியாமல் பந்து மட்டையில் பட்டு பள்ளியின் சத்துணவு மைய கட்டிடங்களை நோக்கி பறந்தது. அப்படி பறந்து சென்ற பந்து, அந்த வழியாக சென்ற ஒரு பெண்ணின் நெஞ்சில் அடித்தது. வலியில் அந்த பெண் மயங்கி கீழே விழுந்தாள்.

எங்களுக்கு சிறிது நேரத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்ணன் வேகமாக பள்ளி கட்டிடங்களுக்குள் சென்று தண்ணீர் பிடித்து வந்தான். அரவிந்த் அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீரை தெளித்தான். அந்த பெண் முழித்து பார்த்ததும் தான் எனக்கு நிம்மதி பிறந்தது. ஆனந்த் மிதிவண்டியை எடுத்து கொண்டு வேகமாக ஊருக்குள் பறந்தான். அந்த பெண் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு மெதுவாக எழுந்து தரையில் அமர்ந்தாள். ஆனந்த் ஊருக்குள் சென்று சோடா வாங்கி வந்தான். அந்த பெண்ணிற்கு அந்த சோடாவை குடிக்க கொடுத்தோம். அவள் அந்த சோடாவை குடித்து விட்டு எழுந்து நின்றாள். இது எதிர்பாராமல் நடந்து விட்டது என்று அந்த பெண்ணிடம் முத்துவும், இளங்கோவும் மன்னிப்பு கேட்டு கொண்டனர்.

“ஆளுங்க வாராங்க போறாங்கணு பாக்காம அப்படி என்னடா விளையாட்டு வேண்டியது இருக்கு. எல்லாம் சரியான காட்டு பசங்க. நீங்கலாம் கிரிக்கெட் விளையாடி அப்படி என்னத்தடா கிழிக்க போறீங்க” என்று எழுந்து பத்திரகாளி போல அந்த பெண் கத்த ஆரம்பித்தாள். அவளின் வசவு எல்லைகளை கடந்து சென்றது. அனைவரும் பொறுமையை இழக்க ஆரம்பித்தோம்.

ஒரு கட்டத்தில் மிகவும் பொறுமை இழந்த கிடா குமாரு, “அட ச்சீ கிளம்பி போம்மா, இல்லன பேட்’டால (மட்டையால) அடிச்சு உன் மண்டய உடைச்சிருவேன். உன்ன யாரு கிரவுண்டு’குள்ள (மைதானம்) வர சொன்னது, ரோட்டுல நடந்து போக வேண்டியது தான.” என்று எகிறினான். “அடிச்சிருவியாடா, அடி பாக்கலாம்” என்று அந்த பெண்ணும் எகிறினாள். மட்டையை தூக்கி அந்த பெண்ணை அடிக்க முற்பட்டான் கிடா. நாங்கள் அவனை தடுத்து நிறுத்தினோம். அந்த பெண் அவ்விடத்தை விட்டு நகர ஆரம்பித்தாள். போகும் போது “இங்கேயே இருங்க டா. நான் போய் என் மகனையும், புருஷனையும் கூட்டிட்டு வர்ரேனு” என்று மிரட்டி விட்டு சென்றாள். “உங்க ஆயாவை கூட கூட்டிட்டு வா, இங்க தான் இருப்போம்”னு பதிலளித்தான் முத்து. “அவ போய் யார வேனாலும் கூட்டிட்டு வரட்டும் நான் பாத்துக்கிறேன்” என்றான் கிடா குமாரு.

“ச்ச இன்னிக்கு எந்த மூஞ்சில முழிச்சேனே தெரியல, இப்படி ஆயிடுச்சே”னு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான் கிடா குமார். அனைவரின் முகத்திலும் மீண்டும் சிரிப்பு மலர்ந்தது. அன்று மாலை மிக நீண்ட நேரம் விளையாடி கொண்டே இருந்தோம். சவால் விட்டு சென்ற அந்த பெண் மீண்டும் வரவே இல்லை. அன்று கிளம்பிய போது அந்த பெண் சென்ற பாதையில் யாரேனும் திரும்பி வருகிறார்களா என்று பார்வையை பதித்துக் கொண்டே வீடு திரும்பினோம். இன்று வரை என் நண்பர்களும், சகோதரர்களும் அங்கு தான் விளையாடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நடந்து 8 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு தெரிந்து அந்த பெண் இந்த பாதையில் இன்று வரை வந்ததாக தெரியவில்லை. இன்று வரை காத்திருக்கிறோம் கார்க் பந்துடன் அந்த பெண்ணுக்காக!!!

Wednesday 1 April 2015

பிரம்மச்சுவடி


பிரம்மச்சுவடி

நீங்கள் அனைவரும் 90 களில் வெளியான லக்கிமேன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் நடந்ததை போன்ற ஒரு சம்பவம் எமலோகத்தில் நடக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

அன்று காலை சித்திரகுப்தன் தன் அலுவல் மேஜையை சுத்தம் செய்யும் போது கை தவறி பிரம்மசுவடி பூமியில் விழுந்து விட்டது. எமனுக்கும் சித்திரகுப்தனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. பிரம்மச்சுவடி கீழே விழுந்து இரண்டு நிமிடங்களுக்குள் பிரம்மா எமலோகத்தில் தோன்றினார்.

நடந்த தவறுக்கு எமனும், சித்திரகுப்தனுக்கும் பிரம்மாவிடம் மன்னிப்பு கேட்டனர். இது ஒரு பொறுப்பற்ற செயல், இதற்கு மன்னிப்பே கிடையாது. 24 மணி நேரத்திற்குள் தொலைந்த பிரம்மச்சுவடியை தேடி கண்டு பிடித்தாக வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து விட்டு பிரம்மா சென்றார்.

பிரம்மச்சுவடியை தேடி எமனும், சித்திரகுப்தனும் பூமியை வந்தடைந்தனர். சாலையில் நடந்து சென்ற ஒருவரிடம் இங்கே தேடலுக்கான சிறந்த வழி எது என்று கேட்க அவர் அருகில் இருந்த கம்ப்யூட்டர் சென்டரை காட்டினார். அந்த கம்ப்யூட்டர் சென்டருக்குள் எமனும், சித்திரகுப்தனும் நுழைய அவர்களை அண்ணாச்சி வரவேற்றார். அவரிடம் இங்கே தேடலுக்கான சிறந்த வழி எது என்று எமன் கேட்க அண்ணாச்சி அவர்களுக்கு கூகிள் பற்றி கூறினார்.

பிறகு எமனும், சித்திரகுப்தனும் கூகிளில் பிரம்மச்சுவடி என்று தேட அவர்களுக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் முடிவுகள் கிடைத்தன. அவற்றுள் பல முடிவுகளில் நவரச நாயகன் கார்த்திக், கவுண்டமணி, செந்தில், சில்க் ஸ்மிதா ஆகியோரின் புகைப்படமே கிடைத்தது. பல சுட்டிகளில் தேடியும் பிரம்மச்சுவடி  பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.



மீண்டும் எமன் அண்ணாச்சியிடம் விசாரிக்க கூகிளில் கிடைக்காத தகவல்கள் கூட சில நேரங்களில் விக்கிப்பீடியாவில் கிடைக்கும் என்று கூற அவர்கள் விக்கிப்பீடியாவிலும் தேடி பார்த்தனர். அங்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

மீண்டும் எமன் அண்ணாச்சியிடம் விசாரிக்க “உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினை தான் என்னையா” என்று அண்ணாச்சி விசாரிக்க “ஒரு முக்கியமான அலுவல் கோப்பினை தொலைச்சுட்டோம். அதை தான் தேடுறோம்” என்று சித்திரகுப்தன் சமாளித்தான்.

“இவ்வளோ தான் பிரச்சினையா, சமூக வலை தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றுள் சில மணி நேரத்தில் உலகம் முழுதும் உள்ள நாடுகளில் இருக்கும் பலரையும் தொடர்பு கொள்ள முடியும். அவர்கள் மூலமாக நீங்கள் தொலைத்ததை கண்டுபிடிக்கலாம்” என்று அண்ணாச்சி கூற எமன், சித்திரகுப்தன் இருவரும் பேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் போன்ற தளங்களில் ஆளுக்கொரு அக்கவுண்ட் திறந்து நண்பர்களை சேர்க்க ஆரம்பித்தனர்.

பிரம்மன் கொடுத்த 24 மணி நேரம் அவகாசம் முடிந்ததே தெரியாமல் இருவரும் இணையத்தில் ஆழ்ந்தனர். 24 மணி நேரம் ஆகியும் எந்த தகவலும் இல்லாததால் பிரம்மாவும் பூமியை அடைந்தார். பிரம்மாவை பார்த்த பின் தான் தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததை உணர்ந்தனர் எமனும், சித்திரகுப்தனும்.

தங்களுக்கு கொடுத்த நேரம் மிகவும் குறைவு என்றும் இன்னும் சில மணி நேரம் ஒதுக்குமாறும் இருவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். இருவரையும் பார்த்து சிரித்த பிரம்மா தன் கையில் இருக்கும் பிரம்மச்சுவடியை அவர்களிடம் காட்டினார். 
   
பூமியில் ஏற்பட்டிருக்கும் விஞ்ஞான வளர்ச்சி உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே இது போன்று ஒரு விளையாட்டை நடத்தினேன். இனி நம்ம தலைமை அலுவலுகங்களான பிரம்மலோகம், சிவலோகம், தேவலோகம், எமலோகம் ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர் மூலமாக தான் கணக்கு வழக்கு பார்க்க போறோம். அதுக்கு டெமோ கொடுக்க தான் உங்களை அனுப்பி வச்சேன். முதல் வேலையா உங்க பிரம்மச்சுவடியை தூக்கி போட்டுட்டு அதுல இருக்க டேட்டா எல்லாத்தையும் கம்ப்யூட்டர்க்கு மாத்துங்க. பென் ட்ரைவ் ல ஒரு பேக்அப் எடுத்து எனக்கு ஒரு காப்பி கொடுங்க என்றார்.

தங்கள் எமலோகம் கணினி மயமாக போவதை எண்ணி சந்தோசத்துடன் எமலோகம் கிளம்பினர் எமனும், சித்திரகுப்தனும் அண்ணாச்சிக்கு நன்றி கூறிவிட்டு.