Friday 24 February 2012

பயணம்

சில பயணங்கள் சுகமாய் அமைவது உண்டு. சில பயணங்கள் சுமையாய் அமைவது உண்டு. சில பயணங்கள் நம் வாழ்க்கையையே மாற்றி அமைத்து விடும். அது போன்ற ஒரு பயணத்தை கதையாக எழுத முற்பட்டுள்ளேன்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இரவு 7.00 மணி. அன்று பேருந்து நிலையம் சிறிது நெரிசல் குறைந்தே இருந்தது. 55 பி பஸ்ஸில் இருந்து நெற்றி நிறைய திருநீருடனும் கையில் மஞ்சள், சிவப்பு, கருப்பு என்ற நிறங்களில் ஆன கயிறுகளுடனும் ஒருவன் இறங்கினான். அது வேற யாரும் இல்லங்க. நம்ம கதாநாயகன் சரவணன் தான். மறுநாள் காலை சென்னையில் நடைபெற இருக்கும் ஒரு நேர்முக தேர்வில் பங்குபெற சென்னை செல்வதற்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து வந்திருக்கவன் தான் நம்ம ஹீரோ.

சரவணன் பேருந்தில் ஏறி 40 நிமிடங்கள் ஆகியும் பேருந்தை எடுப்பது போல தெரியவில்லை. சென்னை, திருச்சி என்ற குரல்கள் மட்டும் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. மிக பெரிய போராட்டதிற்க்கு பின் பேருந்து மாட்டுத்தாவணியில் இருந்து கிளம்பியது. வண்டி பேருந்து நிலையத்தை விட்டு வெளியேற இருந்த நேரத்தில் நீல நிற ஜீன்ஸ் பேண்டுடனும், வெள்ளை நிற சட்டையுடனும் மிக கம்பீரமான தோற்றத்துடனும் கூடிய 40 வயதை எட்டிய ஒருவர் பேருந்தில் ஏறினார். அவர் தான் ராகுல் சம்பத். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிபவர். நேராக வந்து சரவணின் அருகில் அமர்ந்தார். சரவணன், சம்பத் இருவருக்குமான உரையாடல்கள் இங்கே.

சம்பத்: என்ன தம்பி சென்னையா? (மனதிற்குள்: திருச்சியிலேயே இறங்கிட்டான நல்லது. நல்ல நெரிசல் இல்லாம உட்காரலாம்).

சரவணன்: ஆமா ஸார். சென்னை தான். ( மனதிற்குள்: ஹாயா உட்கார்ந்திருந்தேன். இப்படி நந்தி மாதிரி வந்து இடிச்சுக்கிட்டு உட்கார்ந்துட்டாரே!!).

சம்பத்: ஓ!! என் பேரு சம்பத். நானும் சென்னை தான் போறேன். நீ சென்னையில எங்க போற?

சரவணன்: ஒரு இன்டர்வியூக்கு போறேன் ஸார்.

சம்பத்: ஓஹோ!! என்னப்பா படிச்சுருக்க?

சரவணன்: BE. சிவில் இன்ஜினியரிங் ஸார். முடிச்சு 2 வருஷம் ஆச்சு.

சம்பத்: 2 வருஷமா எங்க வேலை பாத்துக்கிட்டு இருந்தப்பா?

சரவணன்: இல்லை ஸார். அப்பா கூட காண்ட்ராக்ட் வேலை பாத்துக்கிட்டு இருந்தேன்.

சம்பத்: ஓ. காண்ட்ராக்ட் வேலைனா நிறைய சம்பாதிக்கலாமே. கருப்பாவும் வெள்ளையாவும்.

சரவணன்: அப்படி எல்லாம் ஒட்டு மொத்தமா சொல்லாதீங்க. இந்த தொழில்லயும் எங்கள மாதிரி சில நேர்மையான ஆட்கள் இருக்காங்க.

சம்பத்: அப்ப உனக்கு பணம் சம்பாதிக்க ஆசை இல்லையா?

சரவணன்: இருக்கு. எப்பவும் முதலாளியா இருக்கணும். உழைச்சு நிறைய சம்பாதிக்கணும். நமக்கு கீழே 10,15 பேர் வேலை பாக்கணும். ஆனா அப்பா என்னை ஒரு வேலைக்கு போக சொல்லி கட்டாய படுத்துறாரு.

சம்பத்: ஏன் உங்க அப்பா கட்டாயபடுத்துறாரு?

சரவணன்: கொஞ்சம் தொழில்ல நஷ்டம் ஸார். அதான் அப்பா இப்படி பண்றாரு. ஒரு ரூபா போட்டா பத்து ரூபா நாலு மாசத்துல சம்பாதிக்கலாம். அதை விட்டுட்டு என்னை வேலைக்கு போக சொல்றாரு.

சம்பத்: அப்ப உனக்கு வேலைக்கு போக சுத்தமா இஷ்டம் இல்லையா?

சரவணன்: ஆமா ஸார்.

சம்பத்: சரி பா. கொஞ்சம் குளிர்ரா மாதிரி இருக்கு. ஜன்னலை மூடி வச்சிரலாமா?

சரவணன்: சரி ஸார்.

ஜன்னலை மூடி இரண்டு நிமிடத்தில் சரவணின் குறட்டை சத்தம் பேருந்தில் தூங்கி கொண்டிருந்த அனைவரையும் தட்டி எழுப்பியது. மறுநாள் காலை தன் கிராமத்து உருவத்தினை முழுவதுமாய் கலைத்து விட்டு நேர்முகத் தேர்வுக்கு கிளம்பினான் சரவணன். நேர்முக தேர்வு அறைக்குள் நுழைந்த சரவணனுக்கு மிக பெரிய அதிர்ச்சி. அங்கே தேர்வாளராக அமர்ந்திருந்தவர் சம்பத்.

சரவணனை கண்ட சம்பத், வா பா வந்து உட்காரு என்று அழைத்தார். சரவணன் அமர்ந்ததும் தம்பி உனக்கு இந்த வேலை ஒத்து வராது. இந்த வேலைக்கு உரித்தான தகுதி உன்கிட்ட இல்லை என்று எடுத்த எடுப்பிலே சாட்டையை சுழற்றினார். இனி என்ன சொன்னாலும் இந்த வேலை தனக்கு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டு சரவணன் தன் இருக்கையில் இருந்து எழுந்தான்.

எழுந்தவனை மீண்டும் அமர சொன்னார் சம்பத். உட்காருப்பா. என்ன சாப்பிடுற? காபி'யா டீ'யா என்று பேச்சை மாற்றினார் சம்பத். பின் இருவருக்கும் காபி வரவழைக்கப்பட்டது. பிறகு சம்பத் தன் பேச்சினை மீண்டும் தொடர்ந்தார். நீ நேர்முகத் தேர்வுக்கு வந்த வேலை உனக்கு பொருத்தமா இருக்காது. ஆனா எங்க கம்பெனில இன்னொரு வேலை இருக்கு. ஆமா பா. பிசினஸ் டெவலப்மெண்ட் (தொழில் விரிவாக்க) துறைல ஒரு வேலை இருக்கு. அது உனக்கு தகுதியான வேலை. இதுல உனக்கு சம்பளம் போக கம்பெனிக்கு உன்னால கிடைக்குற லாபத்துல ஒரு பங்கும் இருக்கு.

உன்ன மாதிரி தொழில் பக்தியும், தொழில்ல ஜெயிக்கணும்னு வெறியும் இருக்கவங்க தான் இந்த வேலைல சாதிக்க முடியும். என்ன பா? இந்த வேலை உனக்கு ஓகே வா? இல்லை ஊருக்கு போகணுமா என்றார். சரவணனும் இந்த வேலையில் சேர சம்மதித்தான். அன்று முதல் சரவணன் தொழிலில் நேர்த்தியுடனும், வியாபார உக்தியுடனும் அந்த அலுவலகத்தில் பணி புரிந்தான். அவன் நேர்மையும், விடாமுயற்சியும் அந்த நிறுவனத்தை மிக பெரிதாய் வளர்த்தது.

5 வருடம் ஆகிறது சரவணன் இந்த வேலையில் சேர்ந்து. இப்போது சரவணனும் அந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரர். சரவணனை போன்று நம்முள் பல இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடனும், ஆர்வத்துடனும் உள்ளனர். அவர்கள் ஆர்வத்தை அறிந்து அவர்களுக்கு சரியாக தீணி போட வேண்டியது இந்த சமுதாயத்தின் கடமை.

No comments:

Post a Comment