Sunday 18 March 2012

தேர்வுக்கு எப்படி படிக்கணும்

இந்த தலைப்புல எழுத வேண்டும் என்று எண்ணினாலும், அதை எழுதுவதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லாததால், என்னை சுற்றி இருந்தவர்கள் எப்படி படித்தனர் என்பதை வைத்து எழுதுகிறேன்.

பொதுவாக தேர்வுக்கு தயாராபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். இதில் முதல் பிரிவினர் கடமையே கண்ணாக கருதுபவர்கள். ஆசிரியர் வகுப்பில் நடத்தும் பாடத்தை ஒரு போதும் கவனிக்க மாட்டார்கள். புத்தகங்களை தலைக்கு தலையணையாக மட்டுமே கருதுபவர்கள். இவர்களுக்கு தேர்வு என்றால் மனதில் ஒரு பயமும் இருக்காது, பதற்றமும் இருக்காது. வினாத்தாள் எளிதானது, கடினமானது என்ற யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இவர்கள். இவர்களுள் சிலர் பிட் அடித்தோ, அடுத்தவர்களை பார்த்து காப்பி அடித்தோ தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். தேர்வு முடிவுகளை பற்றியும் இவர்களுக்கு எந்த ஒரு கவலையும் ஏற்பட வாய்ப்பில்லை.

இரண்டாவது பிரிவினர் வாழ்க்கையை ரசித்து வாழ தெரியாதவர்கள். மாணவர் பருவத்தை புத்தகங்களுடனேயே வாழ்ந்து வீணாக்கியவர்கள். வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதே இவர்களுக்காக தான் என்றால் அது மிகையல்ல. அந்த அளவு வகுப்பில் கவனம் செலுத்துவார்கள். அது மட்டுமில்லாது அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுபவர்கள். இவர்களுக்கு தேர்வு என்றாலே ஒரு விதமான பதட்டம் இருக்கும். ஆம், எப்படியாவது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற பதட்டம் இருக்கும் தானே. இவர்களுக்கும் தேர்வு முடிவுகளை பற்றிய கவலை அதிகம் ஏற்பட வாய்ப்பில்லை.

மூன்றாவது பிரிவினர் கொஞ்சம் வித்தியாசம் ஆனவர்கள். எப்பவாவது ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை கவனிப்பார்கள். மற்ற நேரங்களில் பாடங்களை கவனித்து கொண்டிருக்கும் மாணவிகளை கவனித்து கொண்டிருப்பார்கள். தேர்விற்கு முதல் நாள் மட்டுமே இவர்களுக்கு எப்படியாவது படித்து தேர்ச்சி தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். முதல் நாள் உட்கார்ந்து மாங் மாங் என்று படிக்கும் குணம் உடையவர்கள்.

இவர்கள் தேர்வுக்கு தயார் ஆவதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். சிலர் புத்தகத்தை ஒரு கையில் வைத்து கொண்டு இன்னொரு கையால் தலையை கொட்டி கொண்டோ, நெஞ்சில் குத்தி கொண்டோ படிப்பார்கள். இன்னும் சிலர் தாங்கள் படித்ததை காற்றிலேயே எழுதி பார்த்து கொண்டு இருப்பார்கள். இதற்கான காரணத்தை ஒரு முறை நண்பர் ஒருவரிடம் விசாரித்தேன். அப்போது அவர் கூறிய காரணம் கொஞ்சம் வித்தியாசம் ஆனது தான். காற்றில் எழுதி வைத்த வார்த்தைகள் தேர்வு அறையில் இவர்கள் கண்களுக்கு மட்டும் தெரியும் என்று கூறினார்.

இன்னும் சிலர் ஒரு இடத்திலேயே உட்கார மாட்டனர். கையில் புத்தகத்துடன் அங்கும் இங்கும் வலம் வந்து கொண்டிருப்பார்கள். இப்படி மூன்றாம் பிரிவினர் செய்யும் கூத்துகளுக்கு அளவேயில்லை. தேர்வு முடிவுகளை அதிகம் எதிர்பார்ப்பவர்களும் இவர்கள் தான். இவளோ பேசுறியே, இதுல நீ எந்த பிரிவுனு கேக்குறீங்களா? நானும் தேர்விற்கு முதல் நாள் உட்கார்ந்து மாங் மாங் என்று படிக்குற நல்லவனுங்க.

1 comment:

  1. நல்ல கட்டுரை...அழகான பின்னணியை மறைத்துக் கொண்டிருக்கிறது, உங்கள் வெண்திரையில் எழுத்துக்கள்... அதை மாற்ற முடியாதா...?

    ReplyDelete