Wednesday 4 March 2015

சிறுகதை

குமார் ஒரு நல்ல எழுத்தாளன். எழுத்தையும் மொழியையும் நேசித்து எழுதுபவன். இதுவரை பல நல்ல படைப்புகளை உருவாக்கியிருக்கிறான். ஆனால் கடந்த சில மாதங்களாக பெரிதாக எதுவும எழுதியிருக்கவில்லை. அன்று இரவு எட்டு மணிவாக்கில் கையில் நோட்டு  பேனாவுடன் தன் அறைக்குள் நுழைந்தான். சிறுகதை ஒன்றை எழுதலாம் என்று முடிவு செய்திருந்தான்.


நோட்டின் உச்சத்தில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பித்தான்.
“தேவதைகள் வானத்தில் இருந்து பூமிக்கு வருவதில்லை.
பூமியில் இருந்தே வானுக்கு செல்கிறார்கள்.
எனக்கென்று பூமியில் பிறந்த ஒரு அழகான தேவதை, சிவானி” என்று காதல் ரசம் சொட்ட சொட்ட எழுத ஆரம்பித்தான்.



சிவானியை எங்கே முதன் முதலில் பார்த்தான்? எப்போது பேசினான்? எப்போது அவனுக்குள் காதல்
மலர்ந்தது? எப்போது காதலை வெளிபடுத்தினான்? போன்ற விஷயங்களை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதினான். அதை ஒரு கதையாக எழுதினான் என்று சொல்வதை விட ஒரு அழகிய கவிதையாக வடித்தான் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.



என்னையும் உட்பட சில எழுத்தாளர்கள் நான்கு வரி எழுதுவதற்குள் பத்து முறை அடித்தல் திருத்தல்களை செய்து விடுவர். ஆனால் குமார் அப்படி இல்லை. மூன்று பக்கம் எழுதி விட்டான். மிக அழகான எழுத்துக்கள். ஒரு அடித்தல் திருத்தல் கூட கிடையாது. நாலாவது பக்கத்தை எழுத ஆரம்பித்தான்.



“அன்று சிவானி என்னை அழைத்திருந்தாள். எப்படியும் தன் மனதில் மறைத்து வைத்திருக்கும் காதலை வெளிபடுத்திவிடுவாள் என்ற ஆசையுடன் கிளம்பினேன்.” என்று குமார் எழுதிக்கொண்டிருக்கும் போதே யாரோ அறையின் கதவை தட்டினார்கள்.


குமார் சென்று கதவை திறக்க அவன் அம்மா அவனை சாப்பிட வருமாறு அழைத்தாள். நோட்டை
அப்படியே மூடி வைத்து விட்டு சாப்பிட கிளம்பினான். சாப்பிடும் போதும் கூட அவன் எண்ணங்கள் அந்த சிறுகதையின் மீதே இருந்தது. சாப்பிட்டு விட்டு மீண்டும் தன் அறைக்குள் நுழைந்தான்.


அறைக்குள் வந்து நோட்டை திறந்து பார்த்தவனுக்கு மிக பெரிய அதிர்ச்சி. அவன் எழுதிய எழுத்துக்கள் எதையும் காணவில்லை. நோட்டின் எல்லா பக்கங்களையும் தேடி பார்த்தான். அருகில் இருந்த வேறு சில நோட்டுகளில் கூட தேடி பார்த்தான். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சரி போனா போகட்டும் என்று முடிவு செய்துவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தான்.


“தேவதைகள் வானத்தில் இருந்து பூமிக்கு வருவதில்லை. பூமியில் இருந்தே வானுக்கு  செல்கிறார்கள்.” என்று காதல் ரசம் சொட்ட சொட்ட எழுத ஆரம்பித்தான்.



“அன்று சிவானி என்னை அழைத்திருந்தாள். எப்படியும் தன் மனதில் மறைத்து வைத்திருக்கும் காதலை வெளிபடுத்திவிடுவாள் என்ற ஆசையுடன் கிளம்பினேன” என்று எழுதிவிட்டு “ன” மீது புள்ளி வைப்பதற்கும் மின் தடை ஏற்படுவதற்கும் சரியாக இருந்தது.



“எப்ப வருவேன் எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது” என்று நடிகர் ரஜினிகாந்த் பேசும் வசனம் தமிழ்நாட்டில் மின்தடைக்கு மட்டுமே சால பொருந்தும்.



குமார் நோட்டை மூடி வைத்து விட்டு சற்றே இருக்கையில் சாய்ந்தான். இருபது நிமிட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மின் இணைப்பு வந்தது. மின் தடை நீங்கினால் மகிழ்ச்சி வரும் என்று எண்ணினால் அதிர்ச்சியே வந்தது. மீண்டும் அவன் எழுதிய எழுத்துக்கள் எதையும் காணவில்லை.



என்ன செய்வது என்றே தெரியவில்லை குமாருக்கு. சற்றே மனம் குழம்பினான். பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தான். மீண்டும் பிள்ளையார் சுழியில் இருந்து ஆரம்பித்தான்.



“தேவதைகள் வானத்தில் இருந்து பூமிக்கு வருவதில்லை.” என்று தொடங்கி கடகடவென்று எழுத ஆரம்பித்தான். மீண்டும் அதே இடம் “காதலை வெளிபடுத்திவிடுவாள் என்ற ஆசையுடன் கிளம்பினேன்” என்று எழுது கொண்டிருக்கும் போதே பேனாவில் மை தீர்ந்து விட்டது. குமார் மிகவும் எரிச்சல் அடைந்தான்.



வேறு ஒரு பேனாவை தேடினான். பேனா எதுவும் கிடைக்கவில்லை. பென்சில் ஒன்று தான் கிடைத்தது. அந்த பென்சிலை வைத்தாவது மீதி கதையை எழுதி முடித்துவிட வேண்டும் என எண்ணினான்.



மீண்டும் நோட்டை திறக்க மீண்டும் அதிர்ச்சி. எழுதியது எதையும் காணவில்லை. எழுத்தை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுக்கவா முடியும்? அப்படியே கொடுத்தாலும் அந்த புகாரினை காவல்துறையினர் ஏற்று கொள்வார்களா என்ன? என்று பல கேள்விகள் குமாரின் மனதில் ஓடின. சிறிது நேரம் யோசித்தவன் மீண்டும் பென்சிலில் எழுத ஆரம்பித்தான்.



“தேவதைகள் வானத்தில் இருந்து பூமிக்கு வருவதில்லை.” என்று காதல் ரசம் சொட்ட சொட்ட எழுத ஆரம்பித்தான். ஏற்கனவே மூன்று முறை எழுதி தொலைத்த அதே பழைய ரசம் தான்.



அதே மூன்று பக்கங்கள். “காதலை வெளிபடுத்திவிடுவாள் என்ற ஆசையுடன் கிளம்பினேன்” என்று எழுதி நிறுத்தினான். அடுத்த நிமிடமே அழிப்பான் (ஆங்கிலத்தில் eraser) கொண்டு அழித்தால் எப்படி பென்சில் எழுத்துக்கள் அழியுமோ அது போலவே அவன் கண் முன் அவன் எழுதிய எழுத்துகள் அனைத்தும் அழிந்தது.


அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. லேசாக மயக்கம் வர அப்படியே அருகில் இருந்த கட்டிலில் படுத்து தூங்கிவிட்டான்.


காலை விடிந்ததும் நடந்தவை அனைத்தையும் தன் தந்தை சேகரிடம் கூறினான் குமார். சேகர் சற்று குழம்பினாலும் தன் மகனை அழைத்து கொண்டு மனநல மருத்துவர் கௌதமிடம் சென்றார். கௌதம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விசாரித்து விட்டு குமாரை பரிசோதித்தார்.



குமாரை பரிசோதனை அறையிலேயே விட்டுவிட்டு சேகரிடம் வந்து “ ஒண்ணும் பிரச்சினை இல்லை. குமார் கதை எழுதுனதா சொல்ற நோட்டு, பேனா, பென்சில் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு இரண்டு நாளைக்கு அப்புறம் வாங்க” என்றார்.


சேகர் மருத்துவரிடம் “எனக்கு என்னமோ பயமா இருக்கு சார். நேத்து ராத்திரி எங்க வீட்டுல இவன தவிர வேற யாருமே இல்லை. எல்லோரும் பழனி கோவிலுக்கு போயிருந்தோம். இன்னிக்கு காலையிலே தான் வந்தோம். அவன் பாட்டுக்க எழுதுனத காணோம், அம்மா சோறு போட்டுச்சு’னு உளறிகிட்டு இருக்கானே சார்” என்றார் சோகமாக.



“ஒண்ணும் கவலை படாதீங்க சேகர். இரண்டு நாளைக்கு அப்புறம் வாங்க. சரி பண்ணிடலாம்” என்றார் கௌதம்.



இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் குமாரும் சேகரும் மருத்துவரை காண வந்தனர். அவர்கள் எடுத்து வந்திருந்த நோட்டை வாங்கி பார்த்தார் கௌதம்.



பிறகு கௌதம் சேகரை தனியாக அழைத்து “ உங்க பையன பத்தி அவன் நண்பர்கள்’ட விசாரிச்சேன். அவன் கல்லூரி காலத்துல சிவானி’னு ஒரு பொண்ண லவ் பண்ணிருக்கான். அவளும் இவன லவ் பண்ணிருக்கா. சாலை விபத்துல அந்த பொண்ணு இறந்து போயிட்டாளாம்.”



“குமார், அவனோட வாழ்க்கையிலே நடந்த உண்மையை தான் கதையா எழுத முயற்சி பண்ணிருக்கான். ஆனா சிவானி இறந்துட்டா’ங்கிறத மட்டும் உங்க பையன் மனசு ஏத்துக்கலை. அதான் அவள் இறந்துட்டா’னு குமார்’னால எழுத முடியல”



“எழுத்து அழியுதுனு சொல்றது எல்லாம் ஒரு பிரம்மை தான். நோட்டை பாருங்க. இதே கதையை நாலு தடவ எழுதி இருக்கார். இந்த பேனா’ல மூன்று தடவ இந்த பென்சில்’ல ஒரு தடவ” எல்லா முறையும் ஒரே இடத்துல கதையை நிறுத்தி இருக்கார். மனசு ஒத்துகிறாத ஒரு விஷயத்தை யாராலும் எழுத முடியாது”



“குமாருக்கு இருக்கிறது சாதாரண மன நோய் தான். இங்க மருத்துவமனையிலே தங்கி ஒரு வாரம் யோகா, தியானம் போன்ற பயிற்சியும், கொஞ்சம் மருந்துகளும் எடுத்துக்கிட்டார்னா எல்லாம் சரியாயிடும்” என்றார் கௌதம்.



கௌதம் கூறியபடி சேகர் குமாரை மருத்துமனையில் விட்டுவிட்டு கனத்த மனதுடன் வீட்டிற்கு கிளம்பினார். ஒரு வாரம் கழித்து வந்து குமாரை அழைத்து சென்றார்.



பத்து நாட்களுக்கு பின் குமார் மீண்டும் கையில் நோட்டு பேனாவுடன் தன் அறைக்குள் நுழைந்தான். எழுத ஆரம்பித்தான்.

“தேவதைகள் வானத்தில் இருந்து பூமிக்கு வருவதில்லை.

பூமியில் இருந்தே வானுக்கு செல்கிறார்கள்.”.....................................தொடரும். 


No comments:

Post a Comment