Saturday 25 April 2015

நானும் கடவுளும் – வேடிக்கை மனிதர்கள் 2

சிறு வயது முதலே எனக்கு  கடவுள் நம்பிக்கை கிடையாது. பள்ளி நாட்களிலேயே பெரியார், அண்ணா போன்றோரின் பகுத்தறிவு சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். வீட்டில் எல்லோரும் கோவிலுக்கு செல்லும் நேரங்களில் நான் மட்டும் வீட்டிலேயே தங்கி விடுவேன். கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு முறை கூட கோவிலுக்கு சென்றதில்லை.

இதனாலேயே பலமுறை எனக்கும் என் அப்பாவிற்கும் வீட்டில் விவாதம் ஏற்படுவது உண்டு. பல முறை அன்பாகவும் சொல்லிவிட்டார், கண்டித்தும் சொல்லிவிட்டார். என்னால் என் பிடிப்பிலிருந்தும் கொள்கைகளிலிருந்தும் பின் வாங்க முடியவில்லை.

அன்று எனக்கு வேலைக்கான நேர்காணல் இருந்தது. பொறியியல் பட்டபடிப்பை முடித்து ஆறு மாதம் முடிந்து விட்டது. இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கை என்னுள் நிறையவே இருந்தது. ஆனால் நான் நாத்திகம் பேசுவதால் தான் எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று என் உறவினர்கள் பலரும் பேச ஆரம்பித்து இருந்தார்கள். என் அப்பாவும் கூட அப்படி தான் எண்ணியிருந்தார்.

மதியம் இரண்டு மணிக்கு தான் நேர்காணல். ஆனால் காலை ஆறு மணி முதலே வீட்டில் பூஜையை ஆரம்பித்து விட்டார்கள். பூ, பழம், சூடம், ஊதுவர்த்தி என்று எல்லாம் வைத்து சாமி கும்பிட ஆரம்பித்து விட்டார்கள். “ என்ன அம்மா? சாமிக்கு பூ, பழம்’லாம் லஞ்சம் கொடுத்துக்கிட்டு இருக்கீங்களா. சாமிக்கு கொடுக்கிற லஞ்சத்தை எனக்கு நேர்காணல் எடுக்குற ஆசாமிக்கு கொடுத்தீங்கனா எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சிரும் அம்மா” என்றேன். அப்பா கோபமுடன் “வாயை மூடிட்டு, நீ படிக்குற வேலைய பாரு. இதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்” என்றார்.

மதியம் ஒரு மணி வாக்கில் நேர்காணலுக்கு கிளம்ப தயாராயிருந்தேன். அம்மா கையில் விபூதி தட்டுடன் வந்து என் நெற்றியில் விபூதி பூசி விட்டாள். நான் உடனே விபூதியை அழித்துவிட்டு, “என் திறமைக்கு வேலை கிடைச்சா போதும். இந்த சாம்பல் பூசுறதுனால எனக்கு ஒரு வேலை கிடைக்கும்’னா, அப்படி ஒரு வேலையே எனக்கு வேண்டாம்” என்றேன். மீண்டும் அப்பா கோபமுடன் “நேர்காணலுக்கு போற நேரத்துல இப்படி எதிர்மறையா பேசாதடா. நல்லபடியா முடிச்சுட்டு வேலையோட வாடா’ என்றார்.

இரண்டு மணி என்று கூறியவர்கள் மாலை ஐந்து மணிக்கே என்னை நேர்காணலுக்கு அழைத்தார்கள். முதலில் என் பொறியியல் துறை (கட்டிடவியல்) சார்ந்த சில கேள்விகளை ஒருவர் கேட்டார். நானும் என்னால் முடிந்தவரை அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். அவரின் நேர்காணல் முடிந்த பின் மனிதவள துறை மேலாளரை (HR மேனேஜர்) சந்திக்க சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள்.

ஒருவர் வழுக்கை தலையுடன் நெற்றி நிறைய விபூதி பூசி கொண்டு உட்கார்ந்து இருந்தார். அவரை பார்த்ததும் எனக்கு கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டது. “HR மேனேஜர்’லாம் நல்ல சட்டை போட்டு வருவாங்கனு தான் கேள்விபட்டிருக்கேன். நல்ல பட்டை போட்ட HR மேனேஜர இன்னிக்கு தான் பார்க்கிறேன்”

அவர் முதலில் என்னை பற்றியும் நான் படித்த கல்லூரி பற்றியும் சில விவரங்களை கேட்டு கொண்டார். பின் எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறேன் என்பது பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். அடுத்ததாக “இந்து மதத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்றார்.

“எனக்கு கடவுளின் மீதும் நம்பிக்கை கிடையாது. மதங்களின் மீதும் நம்பிக்கை கிடையாது. எனக்கு இந்து மதத்தை பற்றியும் தெரியாது, இஸ்லாமும் தெரியாது, கிறிஸ்துவமும் தெரியாது. உலகத்துல இருக்க எல்லாரும் ஒரே ஜாதி தான்; மனித ஜாதி. நாம எல்லாரும் ஒரே இனம் தான்; தமிழ் இனம்” என்றேன்.

“அப்ப நீங்க நாத்திகனா” என்றார் HR. “இல்லை. பகுத்தறிவாதி” என்றேன் நடிகர் கமலஹாசன் பாணியில். “இந்த வேலையா. இல்லை உங்கள் பகுத்தறிவு கொள்கைகளா என்றால் எதை தேர்வு செய்வீர்கள்” என்றார். என் கொள்கைகளை தான் என்றேன். அவர் சிரித்து கொண்டே “ அப்ப உங்களுக்கு வேலை முக்கியம் இல்லையா?” என்றார். “வேலைக்கும் என் பகுத்தறிவு சிந்தனைகளுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்டேன்.

“சும்மா கேட்டேன் தம்பி. உங்களுக்கு வேலை கிடைச்சிருச்சு. இரண்டு நாளில் வேலையில் சேர்ந்திருங்க” என்றார். நான் அவரிடம் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

தொலைபேசியில் வீட்டிற்கு அழைத்து அம்மாவிடம் வேலை கிடைத்த விவரத்தை தெரியபடுத்தினேன். அம்மா “ ரொம்ப சந்தோஷம் தங்கம். நான் கும்பிட்ட சாமி நம்மளை கை விடலை. வேகமா வீட்டுக்கு வந்துரு. நான் உனக்கு பிடிச்ச இடியாப்பம் செஞ்சு தர்றேன்” என்றார். நானும் விரைவிலேயே பேருந்து நிலையத்தை அடைந்தேன்.

அப்போது ஒரு பள்ளி மாணவன் என்னை இடித்து கொண்டு சாலையில் ஓடினான். ஏற்கனவே கிளம்பியிருந்த பேருந்தை நோக்கி வேகமாக ஓடினான். படியில் ஏற முற்பட்ட போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டான். கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நடந்து விட்டது. தலையில் நன்றாக அடிபட்டிருந்தது. நானும் என் அருகே நின்று கொண்டிருந்த இன்னொருவரும் சேர்ந்து அந்த பையனை மருத்துவமனையில் சேர்த்தோம்.

தலையில் அடிபட்டதால் இரத்தம் அதிகமாக வெளியேறி விட்டதாகவும், உடனடியாக ‘ஒ நெகட்டிவ்’ (O-ve) இரத்தம் தேவைபடுகிறது என்றார்கள். நான் உடனே என்னோடது O-ve தான். நான் கொடுக்கிறேன் என்றேன்.

என் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு; எல்லாம் சரியாக இருக்க, என் உடம்பில் இருந்து இரத்தத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். இன்னொருபக்கம் அந்த மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கபட்டு, அவர்களும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்.

பிறகு இரவு ஒன்பது மணிவாக்கில் மருத்துவர் வந்து “பையன் பிழைச்சுட்டான். இனி எந்த பிரச்சினையும் இல்லை. சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்ததால தான் காப்பாத்த முடிஞ்சது” என்றார்.

அந்த பையனின் தந்தை என் கைகளை பற்றி கொண்டு அழ ஆரம்பித்தார். அவர் மனைவி “ ஐயா... நீங்க நல்லா இருக்கணும். எங்க குலத்தையே காப்பாத்தி கொடுத்துருக்கீங்க. நீங்க தான்’யா எங்க குலசாமி” என்று அழுது கொண்டே கூறினாள். நான் அவர்களை சமாதானபடுத்திவிட்டு கிளம்பினேன்.

“எனக்கு சாமி மேலயே நம்பிக்கை இல்லை. இந்த அம்மா என்னைய போயி குலசாமி’னு  சொல்லுதே. நல்ல வேடிக்கை தான்” என்று எனக்கு நானே சொல்லி கொண்டேன். அடுத்தவர்கள் மேல் செலுத்தும் அன்பு தான் கடவுளோ என்ற எண்ணம் எனக்குள் சிறிதாய் எழ ஆரம்பித்தது. நீங்க சொல்லுங்க. கடவுள் இருக்காரா?? இல்லையா??

No comments:

Post a Comment