Wednesday 22 August 2012

வாழ்க்கை


எப்பொழுதும் போல் ஆசிரமம் மிக அமைதியாகவே இருந்தது. குரு தன் சீடர்களுக்கு உபதேசங்களை வழங்கி கொண்டிருந்தார். அப்போது ஆசிரம வாயிலில் ஒரு தங்க பல்லக்கு வந்து இறங்கியது. பல்லக்கில் இருந்து தர்கூர் மாகாணத்தின் அரசன் போகாலன் வெளியே வந்து குருவிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டான்.

அவன் முகத்தில் தெரிந்த சிறு பதற்றத்தை கவனித்த குரு, அரசனை தனியே அழைத்து சென்று அவன் பதற்றத்திற்கான காரணத்தை வினவினார்.

“என் வாழ்வில் நிம்மதியே இல்லை. எந்த நேரமும் ஏதாவது கஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இது ஏன்னு தெரிஞ்சுக்க தான் இங்கே வந்தேன் குருவே” என்று தன் சோகத்தினை குருவிடம் கூறினான் போகாலன்.

குரு போகாலனை அழைத்து கொண்டு ஆசிரமத்திற்கு வெளியே சென்றார். மிக நீண்ட நடை பயணத்திற்கு பின் சற்று தொலைவில் தெரியும் ஒரு மரத்தினை காட்டி அந்த மரத்தில் என்ன தெரிகிறது என்று போகாலனிடம் கேட்டார்.

அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த போகாலன் “ஒரு மரம் தெரியுது. அப்புறம் அதிலிருந்து நிறைய சருகுகள் பூமியில் விழுகிறது” என்றான். அப்போது அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவனை அழைத்த குரு, அவனிடம் மரத்தை காட்டி அதே கேள்வியை கேட்டார்.



அந்த மரத்தை சிறிது நேரம் கவனித்த விவசாயி “மரத்தில் பூத்திருக்கும் பூக்கள் , கிளையில் அமர்ந்திருக்கும் வெண்ணிற புறாக்கள், மரத்தில் தொங்கும் கனிகள் தெரியுது” என்றான். இதைக் கேட்டவுடன் குரு அந்த விவசாயியை திருப்பி அனுப்பி விட்டு போகாலன் பக்கம் திரும்பினார்.

“இப்ப தெரியுதா உன் மன உளைச்சலுக்கு என்ன காரணம் என்று!!?? உனக்கு அந்த மரத்தில் இருந்து விழுந்த காய்ந்த சருகுகள் தான் தெரிந்தது. ஆனால் அந்த விவசாயிக்கு பூக்கள், பறவை, கனிகள் எல்லாம் தெரிந்தது. எல்லாமே நம்ம பார்வையிலே தான் இருக்கு.

பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான ஒரு சிறிய இடைவெளி தான் வாழ்க்கை. அதை ரசித்து வாழ்வதும், வெறுத்து வீழ்வதும் நாம் பார்வையிலே தான் உள்ளது. வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சி தரும் தருணங்களை மட்டும் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். சோகங்களையும் துக்கங்களையும் எப்பவும் திரும்பி பார்த்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சருகாய் தான் போகும்.

குருவின் பேச்சை கேட்ட போகாலனின் மனதில் புது வெளிச்சம் பிறந்தது. குருவுக்கு நன்றிகளை கூறி விட்டு தன் அரண்மனைக்கு கிளம்பினான் புத்தம் புதிய வாழ்க்கையை வாழ.

No comments:

Post a Comment