Sunday 1 July 2012

மூக்கு கண்ணாடி



பார்த்தசாரதி கணினியியல் துறையில் முதுகலை பட்ட படிப்பு படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவன். சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் உள்ள சுடலையர்புரம் எனும் கிராமம். வீட்டிலும், நண்பர்கள் வட்டாரத்திலும் எல்லோரும் அவனை பார்த்தி என்று அழைப்பர். பார்த்தியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அவன் போட்டிருக்கும் சோடா புட்டி மூக்கு கண்ணாடி.

நாள் சித்திரை 1
நேரம் காலை 8.30 மணி

அன்று தமிழ் வருட பிறப்பு என்பதால் விடியற்காலையிலேயே எழுந்து குளித்து விட்டு கோவிலுக்கு கிளம்பியிருந்தான். அப்போது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வர சித்திரை நன்னாளில் தன் தாய், தந்தை, சகோதரியிடம் கைபேசி மூலமாக பாச மழையை பொழிய தொடங்கினான். உடல் நலம் குறித்து தாய் விசாரிக்க “உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கு ஆத்தா. கண்ணுல தான் பவர் கூடிருச்சு போல. கண்ணாடி போட்டாலும் கொஞ்சம் மங்கலா தான் தெரியுது” என்றான். ஒரு வழியாக தாய் மகன் பாச போராட்டத்தை தாண்டி கைபேசியை துண்டித்தான் பார்த்தி.

நேரம் காலை 9.30 மணி

கோவிலுக்கு செல்வதற்கு எலக்ட்ரிக் டிரைன் ஏறினான். தனக்காக ஸ்டேஷனில் காத்து கொண்டிருக்கும் தன் நண்பன் அருணுக்கு தான் கிளம்பி விட்டதாக ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு ரயிலில் அமர்ந்தான்.

நேரம் காலை 10.02 மணி

ஸ்டேஷனில் வந்து இறங்கியதும் பார்த்தியின் கைகளை பிடித்து குலுக்கி விட்டு, இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பிறகு அருண் பார்த்தியிடம் “என்னடா மச்சான் யாரோ நீ வந்த டிரைன் ல இருந்து விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டானாமே. என்ன விஷயம்னு எதுவும் விவரம் தெரியுமா” என்று கேட்டான். “நீ சொல்லி தான் மச்சான் எனக்கு விஷயமே தெரியும். என்ன எதாவது லவ் பெயிலியர் கேஸா இருக்கும்” என்றான் பார்த்தி. அன்று இருவரும் நன்கு ஊர் சுத்தி விட்டு வீட்டுக்கு திரும்பினர். பார்த்தி வீட்டிற்கு திரும்ப கூடவே தலை வலியையும் சேர்த்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

நாள் சித்திரை 4:
நேரம் இரவு 11.30 மணி

முக்கிய பணி ஒன்றை அன்றே முடித்து கொடுக்க வேண்டியிருந்ததால் இரவு நீண்ட நேரம் வரை அலுவலகத்திலேயே முடங்கி இருந்தான் பார்த்தி. அனைத்து வேலைகளையும் முடித்து கிளம்ப 11.30 மணி ஆகி விட்டதால் அவன் உயரதிகாரி வெங்கட்ராமன் தனது காரிலேயே அவனை அழைத்து சென்றார். முதலில் தன் வீட்டிற்கு சென்ற  வெங்கட்ராமன், கார் சாவியை பார்த்தியிடம் கொடுத்து விட்டு “நீ காரை வீட்டுக்கு எடுத்துட்டு போய்ட்டு காலைல எடுத்துட்டு வா” என்று கூறி அனுப்பி வைத்தார். அன்றும் அவன் வீட்டிற்குள் நுழைய கூடவே தன் செல்லமான தலை வலியையும் அழைத்து கொண்டு வந்திருந்தான்.

நாள் சித்திரை 5:
நேரம் காலை 7.30 மணி

காலையில் எழுந்து டி‌வியை போட்டுவிட்டு, தன் காலை கடமைகளில் இறங்கினான் பார்த்தி. பல் துளக்கி கொண்டிருக்க ஏதோ ஒரு தனியார் சேனலில் செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. விடுமுறை காலம் என்பதால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு மேலும் இரண்டு புதிய இரயில்கள்  இயக்கப்படும் என்ற செய்தியை கேட்டு மகிழ்ந்தான். அடுத்த செய்தி அவனை சற்று பயமுறுத்தியது. நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் பைக்கில் பயணம் செய்த ஒரு வாலிபர் மரணம் என்ற செய்தி தான் அது. இது போல் இரவு நேரங்களில் பார்த்தியும் பைக்கில் பயணம் செய்வதுண்டு.

நாள் சித்திரை 10:
நேரம் மாலை 6.30 மணி

தன் செல்ல தோழன் தலைவலி பார்த்தியின் தலையை ஆக்கிரமித்து கொள்ள, அன்று மதிய இடைவேளைக்கு பின் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து விட்டு வீட்டிற்கு வந்திருந்தான். நன்றாக உறங்கி கொண்டிருந்த அவனை வீட்டின் கதவை தட்டி யாரோ தொந்தரவு செய்ய எழுந்து சென்று கதவை திறந்தான் பார்த்தி. வெளியில் வாட்ச்மேன் நம்ம அபார்ட்மெண்டு பார்க்கிங்ல யாரோ செத்து கிடக்கான் சார் என்று சொன்னான். தன் ஆடைகளை மாற்றி விட்டு கீழே சென்று பார்க்க தயாரானான் பார்த்தி.

நேரம் மாலை 6.45 மணி:

அப்போது தான் பார்த்தி தன் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்தான். மூக்கு கண்ணாடி போடுவதற்கு முன் இருக்கும் தன் முகத்திற்கும் மூக்கு கண்ணாடி போட்டவுடன் தெரியும் முகத்திற்கும் பெரிதாய் மாற்றத்தை உணர்ந்தான். பின் பார்க்கிங்கிற்கு சென்று பார்த்து விட்டு மீண்டும் தன் வீட்டிற்குள் வந்தான்.

நேரம் இரவு 8.30 மணி:

முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரிந்த அந்த உருவம் பார்த்திக்குள் கலவரத்தை ஏற்படுத்த மீண்டும் முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் சென்று நின்றான். எந்த ஒரு மாற்றத்தையும் உணராதவன் தன் மூக்கு கண்ணாடியை எடுத்து போட்டான். அப்போது தான் 26 வயதே ஆன அவன் முகத்தில் 50 வயதிற்கான முதிர்ச்சி தோன்றுவதையும், தோள்கள் சுருங்குவதையும் நிறம் வெளுப்பதையும் உணர்ந்தான்.

அவனுக்கு உடல் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது. உடலும் மனமும் பயத்தால் நிரம்பியது. பயம் கோபமாக வெளிப்பட முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது அருகில் இருக்கும் பூ ஜாடியை தூக்கி எறிந்தான். பூ ஜாடியே உடைந்து விழுந்தது.  கண்ணாடியில் இருக்கும் உருவம் அவனை பார்த்து ஏளனமாய் சிரித்தது. அந்த சிரிப்பு சத்தம் அவனுக்கு மிகவும் பழக்கப்பட்டதாக இருந்தாலும் யார் நீ? யார் நீ? என்று கத்த ஆரம்பித்தான். அப்போது தான் கண்ணாடியில் தெரிந்த அந்த உருவம் பேச ஆரம்பித்தது.
அப்போது தான் தெரிந்தது, அந்த உருவம் தன் கல்லூரி காலத்தில் பார்த்திக்கு பிடித்த பேராசிரியர் செல்வ பிரகாஷம் என்பது. மாணவர்களால் அன்போடு எஸ்‌பி சார் என்று அழைக்கப்படுபவர்.

அந்த முகம் பார்க்கும் கண்ணாடி மூலமாக பார்த்தியிடம் எஸ்‌பி சார் பேச ஆரம்பித்தார். “நான்கு மாதங்களுக்கு முன் நான் வேலை பார்த்த அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் மூன்று மாணவர்கள் ஈவ் டீஸிங் செய்தனர். அவர்களின் மீது நான் கல்லூரி முதல்வரின் உதவியுடன் நடவடிக்கை எடுத்தேன். அந்த மாணவர்கள் மீண்டும் அந்த மாணவியிடம் பிரச்சனை செய்ய வேறு வழி இல்லாமல் போலீஸில் புகார் செய்ய வேண்டியதாயிற்று.

ஒரு நாள் இரவு கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த மூன்று மாணவர்களும் என்னை கிரிக்கெட் மட்டையாலும் ஹாக்கி மட்டையாலும் அடித்தே கொன்றனர்.” தனக்கு நடந்த துயர சம்பவத்தை எஸ்‌பி சாரின் உருவம் தெரியும் கண்ணாடி பார்த்தியிடம் கூறியது.

“பதினைந்து நாட்களுக்கு முன் நீ உன் சகோதரியின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்த. அப்போ என் அறைக்குள் வந்த நீ நடந்த சம்பவம் தெரியாமல் சிறிது நேரம் காத்திருந்து விட்டு பின் வெளியே வந்தாய். அப்போது தெரியாமல் உன் மூக்கு கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு என்னுடைய மூக்கு கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டாய். அப்போது என்னை கொன்றவர்களை பழி தீர்க்க எனக்கு புது பார்வை கிடைத்தது. உன்னை பயன்படுத்தி கொண்டேன்.

ஒரு நாள் உன்னுடன் இரயிலில் பயணம் செய்யும் போது என்னை அடித்து கொன்ற கொடூரனில் ஒருவனை கண்டேன். அவனை உன் மூலமாக ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொன்றேன். இன்னொரு நாள் மற்றுமொரு கொடூரனை சாலையில் கார் ஏற்றி கொன்றேன். இன்று மதியம் உன் அப்பார்ட்மெண்ட்டில் உள்ள பார்க்கிங்கில் மூன்றாமவனை கழுத்தை நெரித்து கொன்றேன். இவ்வாறு நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் எஸ்‌பி சாரின் உருவம் பார்த்தியிடம் கூறியது.

நடந்த சம்பவங்களை கேட்ட பார்த்திக்கு தலை சுத்த ஆரம்பித்தது. மயக்கம் போட்டு தரையில் விழுந்தான்.


நாள் சித்திரை 11:
நேரம் காலை 6.35 மணி

காலையில் எழவும் போலீஸில் சரணடைய தயாரானான் பார்த்தி. நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒரு பேப்பரில் எழுதி எடுத்துக் கொண்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றான். நடந்த சம்பவங்களை படித்து பார்த்த கமிஷனரை பயம் தொற்றி கொண்டது. பேராசிரியர் செல்வபிரகாஷத்தின் கொலை வழக்கில் லஞ்சம் வாங்கி கொண்டு அந்த மூன்று மாணவர்களையும் வெளியில் விட்டதால் தான் இந்த பயம். பயத்துடன் கமிஷனர் பார்த்தியை பார்க்க அதே நேரத்தில் அவன் எஸ்‌பி சாரின் மூக்கு கண்ணாடியை போட்டு கொண்டான். கமிஷனர் தப்பிக்க முயல அவரின் மேஜையில் இருக்கும் வெண்கல கோப்பையை எடுத்து கமிஷனரின் தலையில் அடித்து கொன்றான். பிறகு அவரது அறையில் இருந்து வெளியே வந்த பார்த்தி மூக்கு கண்ணாடியை எடுத்து சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தன் அலுவலகத்திற்கு செல்ல பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான்.

No comments:

Post a Comment