Sunday 1 July 2012

சிவ! சிவா!!


தமிழ்தோட்டம் மாதாந்திர பதிவு போட்டிகளில் முதல் பரிசு வென்ற சிறுகதை.





சிவ! சிவா!!

சிறு வயது முதலே மழை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் மழையில் நனைவது என்றால் ரொம்ப ரொம்ப இஷ்டம். பள்ளி நாட்களில் நனைந்து கொண்டே கிரிக்கெட் விளையாடிய ஞாபகங்கள் இன்னும் மனதிலே பசுமையான நினைவுகளாய் உள்ளன.
மழை என்றால் எவ்வளவு இஷ்டமோ அந்த அளவு இடி என்றால் பயந்திடுவேன். இடி விழுந்தால் அடுத்த நொடி வீட்டுக்குள் ஓடி வந்து காதுகளை மூடிக் கொள்வேன். இந்த பயம் சில நேரங்களில் காய்ச்சல், ஜுரம் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தியது. எனது இந்த பயத்தை கவனித்த என் தந்தை இடி விழும் நேரங்களில் சிவ! சிவா!! என்று சொல்லுமாறு கூறினார். அப்படி சொன்னால், இடி நம்மை பார்த்து பயந்து ஓடி விடும் என்றார்.
இடி பயந்து ஓடியதா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் சிவ! சிவா!! என்று சொல்லும் போது மனதிற்குள் பயம் குறைந்து ஒரு விதமான நம்பிக்கை ஏற்படும். 
பின் ஒரு நாள் இரவு வீட்டு திண்ணையில் விளையாடி கொண்டிருந்தேன். அப்போது திடீரென்று பலத்த இடி சத்தம் கேட்க நான் சிவ! சிவா!! என்று கூறி மனதை சாந்தபடுத்தினேன் அப்போது ஒரு குட்டி பெண் என்னிடம் ஓடி வந்து “என்னைய கூப்பிட்டீங்களா அண்ணா?” என்றாள்.
அந்த பெண் என் வீட்டிற்கு எதிர் வீட்டில் புதிதாய் கூடி வந்திருக்கும் கனகராஜ் வாத்தியாரின் மகள் சிவானி. என்னை விட நான்கைந்து வயது இளையவள். அவளின் குரல் மழலை தனம் நிரம்பியதாய் இருந்தது. அக்கா, தங்கை என்று யாரும் இல்லாத காரணத்தினாலோ என்னவோ அவள் என்னை அண்ணா என்று அழைக்கவும் ஒரு விதமான ஈர்ப்பும், பாசமும் அவள் மீது தோன்றியது.
அவளை தூக்கி திண்ணையில் அமர வைத்து அவளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் மழை ஆரம்பிக்கவே இருவரும் மழையில் நனைந்து விளையாட ஆரம்பித்தோம். என்னை போன்றே அவளுக்கும் மழையில் நனைவது என்றால் ரொம்ப பிரியம்.
அன்று முதல் இருவரும் ரொம்ப நெருக்கமாகி விட்டோம். தினம் தினம் மாலை என் வீட்டிற்கு “அண்ணா நானும் வந்துட்டேன்” என்று ஓடி வந்துருவாள். தன் மழலை பேச்சாலும் சுட்டி செயல்களாலும் என் வீட்டில் எல்லோருக்கும் செல்லம் ஆனாள். என் பொம்மைகளும் விளையாட்டு உபகரணங்களும் அவளுக்கும் செல்லம் ஆனது.
அவள் குடும்பத்தில் எங்காவது ஊருக்கு கிளம்பினார்கள் என்றால் ‘அண்ணனை விட்டு வர மாட்டேன்’ என்று அடம் பிடிப்பாள். பல நேரங்களில் அவள் அம்மா வேறு வழியில்லாமல் சிவானியை அடித்து அழைத்து செல்வாள். அதை பார்க்கும் போது மனதிற்கு வருத்தமாய் இருக்கும்.
என் குடும்பத்தினர் கோவில், சுற்றுலா என்று வெளியூர் செல்லும் நேரங்களில், சிவானியை பிரிய மனமில்லாமல் நான் மட்டும் வீட்டிலேயே தங்கி விடுவேன். சில நேரம் சிவானியின் பெற்றோர் அனுமதியுடன் அவளையும் எங்களுடன் வெளியூருக்கு கூட்டி செல்வதுண்டு.
சிவானியின் அன்பும் பாசமும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சில வருடங்களுக்கு பின் மீண்டும் அவள் தந்தைக்கு இட மாறுதலாகி விட அவர்கள் குடும்பம் வேறு ஊருக்கு புலம் பெயர்ந்தது. என் குடும்பமும் தந்தையின் தொழில் சம்பந்தமாக வெளி நாட்டில் குடியேற அதன் பின்னர் சிவானியை பார்க்கவோ, பேசவோ முடியவில்லை. அவள் நினைவுகள் மட்டும் இன்னும் என்னுள் நீங்காமல் நிற்கிறது.
இன்றுடன் பதினைந்து வருடங்கள் ஆகிறது அவள் என்னை விட்டு சென்று. இன்று இடி இடித்த போது கூட சிவ! சிவா!! என்று கூறி விட்டு கதவுகளை நோக்கினேன், சிவானி அண்ணா என்று ஓடி வருவாள் என்ற எண்ணத்தில். சிவ! சிவா!!

No comments:

Post a Comment