Tuesday 29 May 2012

இது கதையா? கவிதையா??


 

அன்று நாராயணன் மிகவும் கவலையுடன் இருந்தான். அவன் காதலி சொன்ன வார்த்தைகள் இன்னும் அவன் காதில் ஒலித்து கொண்டே இருந்தது. “நீயெல்லாம் என்னடா காதலிக்கிற? நம்ம காதலிக்க ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆயிடுச்சு. நீ எனக்காக ஒரு கவிதையாவது எழுதி இருக்கியா? என் தோழி பிரேமா காதலிக்க ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் ஆச்சு. அதுக்குள்ள அவள் ஆளு நாலு கவிதை எழுதி கொடுத்திருக்கான். நீ என்ன பண்ணுவியோ தெரியாது. எனக்கு நாளைக்கு ஒரு காதல் கவிதை எழுதி கொடுக்கிற.” இந்த வார்த்தைகள் தான் நாராயணனுக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அப்போது வீட்டிற்கு வந்த நாராயணன் தோழன் வெங்கட் “என்னடா நாராயணா இவளோ சோகமா இருக்க” என்று கேட்க, அன்று காலை நடந்ததை கூறினான். நாராயணன் “நீ தான்டா நான் கவிதை எழுத உதவனும்” என்று வெங்கட்டை நாராயணன் கேட்டான்.

“கவிதை தானடா! விடு டா ஒண்ணும் பெரிய விஷயமில்லை. சாதாரணமா ரேவதியை பத்தி ஏதாவது யோசிச்சு எழுது. அப்படியே நடுவுல மானே, தேனே, பொன்மானே எல்லாம் சேத்துக்கோ அவ்வளோ தான்” என்று சொல்லி விட்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.

ஒரு காகிதத்தை எடுத்து வைத்து தன் காதல் கவிதையை எழுத ஆரம்பித்தான். முதல்ல அவள் அழகை பத்தி எழுதனும்.

“காண கண் கோடி வேண்டும்
உன் அழகை காண தேவதையே
ஆயிரம் இதயங்கள் வேண்டும்
உன் காதலை தாங்கி கொள்ள
மானே! தேனே!! பொன்மானே!!!”

அப்புறம் அவள் அன்பை பத்தி எழுதணும்.
“அன்பின் மறு உருவம் நீ தானே
பண்பின் அடையாளமும் நீ தானே
மானே! தேனே!! பொன்மானே!!!”

வேற என்ன எழுதுறதுனே தெரியலையே. ம்ம்!!! நம்ம காதல் பத்தி எழுதனும்.

“ எல்லைகளற்றது நம் காதல்
உள்ளங்களை இணைத்தது நம் காதல்
உணர்வுகளை ஒன்றாக்கியது நம் காதல்
மானே! தேனே!! பொன்மானே!!!”

இப்படி எழுதி கொண்டிருக்கும் போதே கைபேசியில் தன் காதலியின் அழைப்பு வர கைபேசியை எடுத்து பேச ஆரம்பித்தான்.

நாராயணன்: சொல்லு செல்லம்.
ரேவதி: “நான் சொல்றதை மட்டும் கேளு நாராயணா. எங்க வீட்டுல எனக்கு மாப்பிள்ளை பாத்திருக்காங்க. மாப்பிள்ளை அமெரிக்காவுல வேலை பாக்குறாரு. எனக்கும் அமெரிக்காவுல போய் செட்டில் ஆகுறது தான் நல்லதுனு தோணுது. காதல் எல்லாம் எனக்கு ஒத்து வராதுனு தோணுது.
நாராயணன்: ஆனா நான் உன்னை ரொம்ப விரும்புறேன் ரேவதி. நீ இல்லாத வாழ்க்கைய நினைச்சு கூட பார்க்க முடியலை.
ரேவதி: சும்மா லூசு மாதிரி பேசாதடா. உனக்கு வேற ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா. இப்ப நம்ம பிரியுறது தான் சரியா இருக்கும். இனிமே என்னை காதலிக்கிறேனு சொல்லிட்டு எதுவும் தொல்லை பண்ணாதே என்றாள்.

இதை கேட்டவுடன் நாராயணனுக்கு என்ன செய்யுறதுனே தெரியலை. இப்படி பொசுக்குனு பிரிஞ்சுருவோம்னு சொல்லுவானு நாராயணன் எதிர்பார்க்கவே இல்லை. உடல் முழுவதும் வியர்த்து கொட்ட ஆரம்பிக்க வீட்டு ஜன்னலை சென்று திறந்து வைத்தான். காற்று பலமாக அடிக்க அவன் எழுதி வைத்திருந்த கவிதை பேப்பர் பறந்து சென்று அருகில் இருந்த தண்ணி வாளியில் விழுந்தது. சோகமாக சென்று நாராயணன் டி‌வியை போட

“நேயர்கள் விருப்பத்திற்கு இணங்க அவர்களுக்கான பாடல் மயக்கமென்ன படத்தில் இருந்து” என்று டி‌வி தொகுப்பாளினி கூற

“காதல் என் காதல் கண்ணீருல
போச்சு அது போச்சு தண்ணீருல”

என்று பாட்டு ஆரம்பிக்க, கோபத்துடன் டி‌வியை அமத்தி விட்டு சென்று படுக்கையில் விழுந்தான் நாராயணன்.



No comments:

Post a Comment